இன்று உலக அகதிகள் தினம் - பாரமாக போய்விடும் அகதிகளின் கனவுகள்

பெருங்கனவுகளுடன் தாய் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெயரும் அகதிகள் பலர் இருக்க... அத்தனை துயரத்திலும் சாதனை என்பது முயன்றால் சாத்தியமே என்பதற்கு எடுத்துக்காட்டாக விளக்குகிறார், இளம் நீச்சல் வீராங்கணை ஒருவர்... அகதிகள் தினமான இன்று... அவர் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.
இன்று உலக அகதிகள் தினம் - பாரமாக போய்விடும் அகதிகளின் கனவுகள்
x
உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் உறவுகளையும், உடமைகளையும் இழந்து, தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற்றப்படுபவர்கள் தான் அகதிகள். நிற்கதியாக நிற்கும் இவர்களுள் பலருக்கு பாரமாக போய்விடுகிறது... அவர்கள் சுமந்த கனவுகள். உலகெங்கும் ஒவ்வொரு இரண்டு நொடிக்கு ஒருமுறை ஆறு பேர் தங்கள் வீடுகளை விட்டு வலுகட்டாயமாக வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கிறது, ஐநாவின் அகதிகள் நிறுவனம். அகதிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்லும் சூழலில் அவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி குறைந்து வருகிறது. உலகெங்கும் உள்ள அகதிகளில் 42 சதவீதம் பேர் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் என்பது மேலும் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. தனது 17 வயதில் அகதி ஆகப்பட்டவர் தான், யுஸ்ரா மர்டினி. உள்நாட்டு போர் காரணமாக தனது சொந்த நாட்டை விட்டு, உயிரை மட்டும் சுமந்தபடி, நீச்சல் கனவுடன் சிரியாவை விட்டு வெளியேறியவர் யுஸ்ரா. ஜெர்மனியில் அடைக்கலம் நாடி, 19 பேருடன் யுஸ்ரா பயணித்த படகின் என்ஜின் திடீரென செயலிழந்தது. அப்போது யுஸ்ராவுடன் சேர்ந்து 4 பேருக்கு மட்டும் நீச்சல் தெரியும் என்பதால், தொடர்ந்து 3 மணி நேரம் படகு கவிழ்ந்துவிடாமல் பிடித்தபடி நீந்தி, அனைவரது உயிரையும் காப்பாற்றினார், சாதனை சிறுமி யுஸ்ரா.

இப்படி உயிராய் நினைத்த, உயிரை காப்பாற்றிய நீச்சலால் உலகிற்கு செய்தி சொல்ல விரும்பினார், யுஸ்ரா... ஜெர்மனி சென்றதும் உள்ளூர்வாசியின் உதவியோடு நீச்சல் பயிற்சி பள்ளியில் சேர்ந்த யுஸ்ரா, கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸிற்கு தேர்வானார். நாடற்றவர்களின் கனவையும் நனவாக்கும் வண்ணம் உலகெங்கிலும் வாழும் அகதிகளுக்கு ஆதரவளிக்க ஒலிம்பிக்ஸில் உருவாக்கப்பட்ட அகதிகள் அணியே இதற்கு காரணம். தன் போல் நாட்டை இழந்த கோடிக்கணக்கான மக்களின் ஒற்றை குரலாக, யுஸ்ரா ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் குதித்தபோது உலகமே அவர் வெல்ல பிரார்த்தித்தது. ஆனால் போட்டியில் யுஸ்ரா தோல்வியடைந்தார். ஆனாலும் கூட தன் கனவை துரத்தியபடி டோக்கியோ ஒலிம்பிக்ஸிற்காக தயாராக தொடங்கிய யுஸ்ரா, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

இப்படி அகதியாய் இருந்து இன்று பலருக்கும் புது வித நம்பிக்கை அளிக்க கூடியவராக உயர்ந்துள்ள யுஸ்ராவின் மற்றொரு பெருங்கனவு... அகதிகள் மீதான உலகத்தின் பார்வையை மாற்ற வேண்டும் என்பதேயாகும். அகதிகள் தினம் இன்று.... பூமியில் யாரும் அகதிகள் இல்லை என்ற நிலை வர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பு.

Next Story

மேலும் செய்திகள்