வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....
வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்
x
கிட்டத்தட்ட சர்வாதிகாரியாகவே திகழும் வடகொரிய  அதிபர் கிம் ஜாங் உன், முதன்முறையாக தங்கள் நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதை பொதுவெளியில் ஒப்புக் கொண்டுள்ளார்...வட கொரிய தலைநகர், ப்யாங்யாங்கில் நடைபெற்ற நாட்டின் மூத்த அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இதை ஒப்புக் கொண்ட அவர், மக்களின் உணவுப் பிரச்சினைகள் மோசமடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்...கடந்த ஆண்டு சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக, விவசாயத் துறையால் உணவுப் பொருட்களை விளைவிப்பதற்கான இலக்கை எட்ட முடியவில்லை என்று கிம் கூறியுள்ளார்...1990களில், வட கொரியாவில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது...அதே போன்ற உணவுப்பஞ்சம் தற்போதும் தாக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்...
உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், ஒரு கிலோ வாழைப்பழம் இந்திய மதிப்பில் மூவாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது...
கொரோனா பரவல் அச்சத்தால், எல்லைகளை மூடியுள்ள நிலையில், சீனாவுடனான வர்த்தகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது...இதனால், உணவு, உரம், எரிபொருள், ஆகியவற்றிற்கு சீனாவைச் சார்ந்துள்ள வட கொரியா மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது...அதிலும் குறிப்பாக, அணு ஆயுதத் திட்டங்களால் பல நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், சர்வதேச அளவில் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது வட கொரியா...இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதமே இது குறித்து எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உன், அரசு அதிகாரிகளை விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்...

 


Next Story

மேலும் செய்திகள்