01.05.2021 || உலக செய்திகள் || மீண்டும் உணவகங்கள், தேநீர்க்கடைகள் திறப்பு - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு

ஃப்ரான்சின் தலைநகரான பாரிசில், கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
01.05.2021 || உலக செய்திகள் || மீண்டும் உணவகங்கள், தேநீர்க்கடைகள் திறப்பு - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு
x
01.05.2021 || உலக செய்திகள் || மீண்டும் உணவகங்கள், தேநீர்க்கடைகள் திறப்பு - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு 

ஃப்ரான்சின் தலைநகரான பாரிசில், கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் மே 19 முதல் உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு வரவேற்பு அளித்துள்ள கடை உரிமையாளர்கள், தொற்று பரவாதவாறு சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா விதிகளைப் பின்பற்றுவதாக உறுதி அளித்தனர். 

 பெருவில் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடினர். பெருவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி லீமா பகுதியில் உள்ள வீதிகளில் மருத்துவ மாணவர்கள் போராடினர். மேலும் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் தங்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். பெரு நாட்டில் இதுவரை 17 லட்சத்து 91 ஆயிரத்து 998 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 60 ஆயிரத்து 742 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற டிஸ்னிலேண்ட் கேளிக்கை பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், டிஸ்னிலேண்ட் பூங்கா மூடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் தொற்றுப் பரவல் குறைந்து இருப்பதால், பூங்கா திறக்கப்பட்டு, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மக்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், கலிபோர்னியாவை சேர்ந்தவர்கள் மட்டுமே, பூங்காவில் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது 

பிரிட்டனில், ஆயிரக்கணக்கான, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை பெரிய அரங்கில், நடனமாட வைத்து, அந்நாட்டு அரசு கொரோனா பரவுகிறதா என சோதனை செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, பிரிட்டனில் உள்ள நடன விடுதிகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு,பரிசோதனை நடத்தி, கொரோனா தொற்று இல்லாதவர்களை நடனமாட வைத்து அந்நாட்டு அரசு பரிசோதனை செய்துள்ளது. மிக  பெரிய அரங்கில் இளைஞர்கள் முக கவசம் இல்லாமல் உற்சாகத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர். இதன் மூலம் கொரோனா பரவல் இல்லாமல் இருந்தால், நடன விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

பிரபல பாப் பாடகி பிலி எலிஷ், தமது புதிய ஆல்பத்தை, வெளியிட்டுள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என துவங்கும் இந்த பாடல் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

சீனாவின் நான்டாங் நகரில் வீசிய சூறாவளி மற்றும் கனமழை காரணமாக 11  பேர் உயிரிழந்தனர். திடீர் என்று வீசிய சூறைக்காற்றில், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில், சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது, மரங்கள் விழுந்ததால், 11 பேர் வரை உயிரிழந்தனர். மரங்களை அகற்றும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். 

நெதர்லாந்தில் முதன்முறையாக 3 டி எனப்படும் முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் கட்டப்பட்ட வீட்டிற்கு, டச்சுத் தம்பதியினர் குடியேறினர். எலிஸ் லட்ஸ் மற்றும் ஹாரி டெக்கெர்ஸ் தம்பதியினர், தாங்கள் வசிக்கப்போகும் 2 படுக்கையறைகள் கொண்ட 3 டி இல்லத்தைப் பார்வையிட்டனர். மொத்தம் 24 தனித் தனி பகுதிகளாக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த வீடானது இய்ந்தோவன் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டு முழுமையான வீடாக மாறியுள்ளது. இது குறித்து டச்சுத் தம்பதி தெரிவிக்கையில், வழக்கமான வீடுகளைப் போல் அல்லாமல் இது மிகவும் புதுமையாக இருப்பதாகவும், மேலும், வீட்டிற்குப் பூசப்பட்ட வண்ணம் காண்போரை மயக்கும் வகையில் இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்