32 ஆண்டுகளாக தீவு வாழ்க்கை - கற்பனைக்கு அப்பாற்பட்ட கனவு வாழ்க்கை

32 வருடங்களாக தனி ஆளாக ஒரு தீவை குழந்தையைப் போல் பாதுகாத்த நபர், அத்தீவுக்கு ப்ரியாவிடை கொடுக்கும் கவலை தோய்ந்த நிகழ்வு பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
32 ஆண்டுகளாக தீவு வாழ்க்கை - கற்பனைக்கு அப்பாற்பட்ட கனவு வாழ்க்கை
x
உலகப் புகழ்பெற்ற ராபின்சன் க்ரூசோ ​புதினத்தில் வருவது போல, உண்மையாகவே இத்தாலியில் ஒரு ராபின்சன் க்ரூசோ வாழ்ந்து வருகிறார்...
அவர்தான் 32 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாய் தீவில் வாழ்ந்து வந்த மௌரோ மொராண்டி...1989ம் ஆண்டு தன் நண்பர்களுடன் இணைந்து, கடற்பயணம் மேற்கொண்ட மௌரோ மொராண்டி இத்தாலியின் மாடலினா தீவுக்கூட்டத்தில் பயணித்தார்...அங்கிருந்து தங்கள் வருங்காலப் பயணங்களுக்குப் பணம் சம்பாதித்து கிளம்புவதுதான் அவர்கள் நோக்கம்...
மௌரோ மொராண்டிக்கும் அதே எண்ணம்தான் இருந்தது... புடெலி (Budelli) தீவைக் காணும் வரை...புடெலி தீவின் பாதுகாவலர் இன்னும் 2 நாட்களில் ஓய்வு பெறப்போகிறார் என்ற செய்தியை அறிந்தவுடன், அவர் அத்தீவை குழந்தையைப் போல் வாரி அணைத்துக் கொண்டு அன்றிலிருந்து இன்று வரை தீவுக்குக் தேவையான பணிவிடைகளை செய்து வந்தார்...புடெலி தீவை அடைந்ததில் இருந்து மனிதர்களைப் பார்க்க விருப்பமே இல்லாத அளவிற்கு, இத்தீவு அவரைக் கட்டிப்போட்டு விட்டது... யாருக்குத் தான் பிடிக்காது இளஞ்சிவப்பு நிற மணலும், பச்சைப்பசேலென மரங்களும் நிறைந்த தீவை...!
யாரும் இல்லாத் தனிமைத் தீவில்... மனிதர்கள் வாசமின்றி... பரபரப்பான நாட்களின்றி... வாகனங்களின் இரைச்சல் இன்றி... தானும் கடலும் மட்டுமாக இயற்கையோடு இயைந்து நிசப்தமான வாழ்க்கையை இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்...மின்சாரம் இல்லா தீவில், சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தியும், சுற்றி சுற்றி எங்கு திரும்பினாலும் கடல் நீர் மட்டுமே இருப்பதால், மழை நீரைச் சேகரித்துக் குடிநீராக்கியும் காலங்கழித்து வந்துள்ளார்...ஆரம்ப நாட்களில் மனிதர்களை உள்ளே அனுமதிக்காது இருந்த மௌரோ மொராண்டி, காலஞ் செல்லச் செல்ல, தான் மட்டும் இந்த அழகை ரசித்தால் போதாது, அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என கதவுகளைத் திறந்துள்ளார்...வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தீவின் அம்சங்கள் குறித்து விளக்கி, புதுப்புது மனிதர்களின் உறவையும் சம்பாதித்து வைத்துள்ளார்... குளிர் காலங்களில் புடெலி தீவுக்கு யாரும் வர மாட்டார்கள் என்பதால், தனிமையில் இருக்கும் தனக்கு புத்தகங்களே துணை என்று வாசிப்பில் மூழ்கி விடுவார்...தீவின் மரம் செடி கொடியும் மௌரோ மொராண்டியின் பெயரைக் கூறும் அளவிற்கு தீவைப் பற்றிய அத்துனை விஷயங்களும் அவருக்கு அத்துப்படி...தீவின் அழகை புகைப்படமெடுத்து இவர் சமூக வலைதளங்களில் வெளியிடுவதால், இணையத்திலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்...ஆனால் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தற்போது புதிய சிக்கல் ஒன்று மௌரோ மொராண்டியின் வாழ்வில் புயல் போல் தாக்கியது...ஆம்... புடெலியில் உள்ள லா மாடலினா தேசிய பூங்கா அதிகாரிகள் 2016ம் ஆண்டு முதலே மௌரோ மொராண்டியை தீவை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தி வந்தனர்...தொடர் அழுத்தம் காரணமாக தீவை விட்டுச் செல்லும் மௌரோ மொராண்டியைப் பிரிய, புடெலி தீவும் தாய்ப்பசுவை விட்டுப் பிரியும் கன்றைப் போல கலங்கித் தான் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை...







Next Story

மேலும் செய்திகள்