மீண்டும் உரசும் ரஷ்யா - அமெரிக்கா

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி உயிரிழந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியை பார்க்கலாம்.....
மீண்டும் உரசும் ரஷ்யா - அமெரிக்கா
x
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி உயிரிழந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியை பார்க்கலாம்.....

அலெக்ஸி நவால்னி...... இந்தப் பெயர்தான் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பன்நெடுங்காலமாக புகைந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கு புதிதாக தூபம் போட்டுள்ளது. 

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி, இரு நாடுகளும் மீண்டும் முட்டி மோதிக்கொள்வதற்கு பாதை அமைத்து தந்துள்ளார் என்றே சொல்லலாம்.

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ரஷ்ய நாட்டின் அதிபராக உள்ளார் விளாடிமிர் புதின்....

உலக அரசியலில் மிக முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் புதினை சுற்றிச் சுழலும் சர்ச்சைகள் ஏராளம்....

வருகிற 2036-ஆம் ஆண்டு வரை, அதிபராக இருப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தை புதின் மாற்றி உள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில்,  புதினுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான அலெக்ஸி நவால்னி தொடந்து குரல் கொடுத்து வந்தார்.

புதின் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதாகவும், தறிக்கெட்டு நிர்வாகம் நடப்பதாகவும் குற்றம்சாட்டிய நவால்னி, புதினுக்கு எதிராக பிரமாண்ட போராட்டங்களை அரங்கேற்றி, ஆட்சிக்கு நெருக்கடியும் அளித்து வந்தார்.
நவால்னியால் நாளுக்கு நாள் புதினுக்கு அழுத்தம் அதிகரித்து வந்த நிலையில், சைபீரிய விமான நிலையத்தில் டீயை அருந்திய பிறகு திடீரென்று மயங்கி விழுந்து, கோமா நிலைக்கு நவால்னி சென்றார்.

இதனைத் தொடர்ந்து, ஜெர்மனியில் நவால்னி சிகிச்சை பெற்ற நிலையில், மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நோவிசோக் என்னும் நச்சு அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சோவியத் யூனியன் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இந்த ரசாயனம், நவால்னிக்கு தரப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வலைகளை உண்டாக்கியது.

உலக நாடுகள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ரஷ்ய உளவு அமைப்புதான் நவால்னியை கொல்வதற்கு நச்சை கலந்ததாகவும், புதினின் உத்தரவிலேயே இது செய்யப்பட்டதாகவும்  குற்றம் சுமத்தியது அமெரிக்கா.... 

இதற்கு ரஷ்ய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. மறுபுறம் மரணத்தின் அருகில் சென்ற நவால்னி, சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்.

ஆனால், நாடு திரும்பிய நவால்னியை, விமான நிலையத்தில் வைத்து ரஷ்ய அரசு கைது செய்தது. பழைய வழக்கு ஒன்றை தூசி தட்டி எடுத்த ரஷ்யா, அவருக்கு இரண்டரை ஆண்டுகள் தண்டனை விதித்து சிறையிலும் அடைத்தது.
இதை எதிர்த்து ரஷ்யா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், நவால்னி தொடர்ந்து சிறையில் இருந்து வந்தார்.

இதனிடையே, தான் முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், மருத்துவர்களை சந்திக்க வேண்டும் என்றும் சிறை அதிகாரிகளிடம் நவால்னி கேட்டதாக தெரிகிறது.

இதற்கு சிறைத்தரப்பினர் மறுப்பு தெரிவித்ததால்,  உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் நவால்னி.

3 வாரங்களாக நவால்னி உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், மருத்துவ உதவிகள் அளிக்கப்படாவிட்டால் அவர் உயிரிழக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

இதனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், ரஷ்யா நவால்னியை நடத்தும் விதம் நியாயமற்றது என்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்....

நவால்னி உயிரிழந்தால் மோசமான விளைவுகளை ரஷ்யா சந்திக்கும் என்றும் பகிரங்கமாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இத்தகைய எச்சரிக்கைகளின் விளைவாக நவால்னியை தற்போது சிறை மருத்துவமனையில் ரஷ்யா அனுமதித்து உள்ளது. 

உயிருக்கு ஆபத்தான சூழலில் நவால்னி அங்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும், பனிப்போர் காலம்போல் மீண்டும் உரசிக்கொள்ள வாய்ப்பு வழங்கி உள்ளார் நவால்னி..



Next Story

மேலும் செய்திகள்