அமெரிக்க முன்னாள் துணை அதிபர் இறப்பு வால்டர் மண்டேல் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டேல் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் இறப்பு வால்டர் மண்டேல் காலமானார்
x
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டேல் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஜிம்மி கார்டர் அமெரிக்க அதிபராக பதவி வகித்த போது வால்டர் மண்டேல் துணை அதிபராகப் பணியாற்றினார். இந்நிலையில், 93 வயதான வால்டர் மண்டேல் இறப்பிற்கு அந்நாட்டின் பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

துருக்கியில் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 55 வயதுக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என துருக்கி அரசு அறிவித்துள்ளது. இதனால் அந்நாட்டு தலைநகர் அங்காராவில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு வெளியே மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஜனவரி 14 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். 

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில், 60 ஆண்டுகால காஸ்ட்ரோ சகோதரர்களின் ஆட்சி நிறைவடைய உள்ளது. கடந்த 1959-ஆம் ஆண்டு முடிவடைந்த கியூப புரட்சிக்குப் பின்னர், அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை செயலாளராக பிடல் காஸ்ட்ரோ இருந்து வந்தார். தொடர்ந்து அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அந்த பதவியை வகித்து வந்தார். இந்நிலையில், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை செயலாளராக அந்நாட்டு அதிபர் மிகுல்-டியஸ் கனல், தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இங்கிலாந்து அரசி இரண்டாம்  எலிசபெத் இன்று தனது 95வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ஆயிரத்து 926ம் ஆண்டு பிறந்த ராணி இரண்டாம் எலிசபெத்  தனது 25வது வயதில் அரியணை ஏறினார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் மிக நீண்டநாள் அரச பதவியில் இருந்த இளவரசர் பிலிப் கடந்த 9-ந் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், கடந்த 17ம் தேதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாள் வழக்கமான அரச முறைப்படி அல்லாமல் சாதாரணமாகவே கடக்க இருக்கிறது. அவர் கடந்த வருடமும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தனது 94வது பிறந்த நாளை அரச முறைப்படி கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அர்ஜென்டினாவில் அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான சிறுத்தை இனமான ஜாகுவாரை அழிவிலிருந்து காக்கும் பொருட்டு அதன் குடும்பத்துடன் ஐபெரா தேசிய பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டது. பிரேசிலைச் சேர்ந்த ஜுரூனா என்ற ஜாகுவார் இன சிறுத்தையும் அதன் குட்டிகளான சஸ்குவா மற்றும் சாசோவுடன் தேசிய பூங்காவிற்கு பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டது. அர்ஜெண்டினாவில் தற்போது 200 முதல் 300 வரை மட்டுமே இவ்வகை ஜாகுவார் சிறுத்தைகள் உள்ள நிலையில், வேட்டையாடுதல், வனங்களை அழித்தல் உள்ளிட்ட காரணங்களால் அவை அழிந்து கொண்டே வருவதால், அவற்றை அழிவிலிருந்து காக்கும் பொருட்டு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தென் அமெரிக்க நாடான சிலியில் டைனோசரின் புதை படிமங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்து உள்ளனர். அங்குள்ள அட்டஹாமா பாலைவனத்தில், மேற்கொண்ட ஆய்வின்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இதை கண்டெடுத்தனர். கண்டெடுக்கப்பட்ட புதை படிமங்கள், பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றும், டிட்டனோசர் வகை டைனோசரின் எலும்புகளாக இருக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பனி பொம்மையை எரிக்கும் நிகழ்வு நடந்தது. ஆல்ப்ஸ் மலையின் அருகாமையில் உள்ள ஆண்டர்மேட் நகரத்தில், உருவாக்கப்பட்டு இருந்த பனிபொம்மைக்கு தீ வைத்து, அந்நாட்டு மக்கள் வசந்தகாலத்தை வரவேற்றனர். பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்படும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு, இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்