உக்ரைன் - ரஷ்யா எல்லையில் படைகள் குவிப்பு

உக்ரைன் எல்லை அருகே ரஷ்ய ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது.
உக்ரைன் - ரஷ்யா எல்லையில் படைகள் குவிப்பு
x
உக்ரைன் எல்லை அருகே ரஷ்ய ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லை பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்ற ரஷ்யா முயற்சி செய்வதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ரஷ்ய எல்லையில் உக்ரைன் படைகளை குவித்து வருகிறது, இதை காரணம் காட்டி ரஷ்யாவும் தன் பங்கிற்கு படைகளை குவித்து வருகிறது. இந்நிலையில் எல்லையில் ரஷ்யா மேற்கொண்டுள்ள ராணுவ பயிற்சி பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது

ஒலிம்பிக் போட்டி ஜூலை மாதம் தொடக்கம் - முக்கிய நகரங்களில் ஒலிம்பிக் தீபம் ஊர்வலம் 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில், ஒலிம்பிக் தீபம் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள ஷிங்கு(Shingu) நகரத்திற்கு கொண்டுவரப்பட்ட தீபத்திற்கு வானவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

சீரம் தடுப்பூசியை வாங்கும் திட்டம் ரத்து - ஆப்பிரிக்க யூனியன் அறிவிப்பு

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் திட்டத்தை கைவிடுவதாக ஆப்பிரிக்க நாடுகளின் யூனியன் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனிகா இணைந்து தயாரித்த தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க யூனியனின் நோய் தடுப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த யூனியனில் உள்ள 55 நாடுகளின் தேவைக்காக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிகளை வாங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

உறைப்பனியால் பாதிக்கப்படும் திராட்சை பயிர் - கதகதப்பை ஏற்படுத்த மெழுகுவர்த்தி ஏற்றம்

பிரான்ஸ் நாட்டில் உறை பனியில் இருந்து திராட்சை பயிர்களை மெழுகுவர்த்திகளை ஏற்றி பாதுகாத்து வருகின்றனர். அந்நாட்டில் நிலவும் உறைபனியால் ஒயின் தயாரிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, திராட்சை தோட்டங்களின் இடையே மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து கதகதப்பான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனர். திராட்சை தோட்டத்தில் எரியும் ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகள் காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

பெண்கள் உடை குறித்து சர்சை கருத்து - இம்ரான் கானுக்கு எதிராக போராட்டம்
 
பெண்கள் உடை அணிவது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்றன.  தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய இம்ரான்கான், பெண்கள் கவர்ச்சியாக உடை அணிவதுதான் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இம்ரான்கான் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

துப்பாக்கி பயன்பாட்டை குறைக்க திட்டம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்காவில் உள்ள துப்பாக்கி கலாசாரம் ஒரு பெரும் நோய் தொற்று என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளர். துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இடையே உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அமெரிக்காவில் அதிகரித்துள்ள துப்பாக்கி பயன்பாட்டை குறைக்க சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்படுவதாக பைடன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்