உயிரைக் கொல்லும் பட்டன் பேட்டரி - பலியான 17 மாத குழந்தை

அமெரிக்காவில், 17 மாத குழந்தை ஒன்று பட்டன் பேட்டரியை விழுங்கியதால் உயிரிழந்த நிலையில், உயிரைப் பறிக்கும் அளவிற்கு அவை ஆபத்தானதா... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
உயிரைக் கொல்லும் பட்டன் பேட்டரி - பலியான 17 மாத குழந்தை
x
ஒரு சிறிய பொட்டு அளவிளான பட்டன் பேட்டரி ஒரு குழந்தையின் உயிரையே பறித்து விட்டது என்றால் நம்ப முடிகிறதா?... அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹேம்ஸ்மித். இவருக்கு 17 மாதங்களே நிரம்பிய  ரீஸ் என்ற பெண் குழந்தை இருந்தது. மிகவும் துறுதுறுவென ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த ரீஸ் திடீரென ஒரு நாள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்... அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, அது வெறும் காய்ச்சல் அல்லது இருமலால் ஏற்படும் மூச்சுத்திணறலாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்த ஹேம்ஸ்மித் எதேச்சையாக டிவி ரிமோட்டில் இருந்த பட்டன் பேட்டரி காணாமல் போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். 

உடனடியாக அவருக்கு ஏதோ ஆபத்து அறிகுறி மனதில் தோன்றவே, தனியார் மருத்துவமனைக்கு ரீசை அழைத்து சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார்... அப்போதுதான் ரீஸ், பட்டன் பேட்டரியை விழுங்கியிருப்பது தெரிந்தது.. குழந்தைகளின் உணவுக்குழாய் மிகவும் சிறியது என்பதால், உள்ளே சென்ற பட்டன் பேட்டரி எளிதாக அதில் சிக்கியுள்ளது... முதலில் உணவுக்குழாயின் ஆரம்பச் சுவரை அரிக்கத் தொடங்கி, தொடர்ந்து உணவுக்குழாய் முழுவதையும் எரித்து அழித்தே விட்டது, அந்த பட்டன் பேட்டரி... உணவுக்குழாயைத் தொடர்ந்து மூச்சுக்குழாயிலும் துளையை ஏற்படுத்தி, சுவாசிக்கும் காற்று உள்ளுறுப்புகளின் எந்தப் பகுதிக்கும் செல்லுமளவிற்கு மோசமான நிலையை உருவாக்கி குழந்தையின் உயிருக்கும் உலை வைத்துள்ளது...

பூலோக தேவதையைப் போல வலம் வந்து கொண்டிருந்த ரீஸின் உயிரை ஒரு சிறிய பட்டன் பேட்டரி பறித்து விட்டது...அவ்வளவு ஆபத்தானவையா இந்த பேட்டரிக்கள் என்றால்...குழந்தையின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு உயிர்க்கொல்லியாக மாறியிருக்கிறது எனும்போது, இதன் வீரியத்தைப் புரிந்து கொள்ளலாம்... இறுதி வரை நம்பிக்கையுடன் இருந்த ஹேம்ஸ்மித்துக்கு ரீஸின் உயிரிழப்பு பேரிடியாக இறங்கியது. கடந்த டிசம்பர் மாதம் ரீஸ் உயிரிழந்த நிலையில், தன் குழந்தையைப் போல வேறு எந்தக் குழந்தைக்கும் ஆபத்து நேரக் கூடாது என்பதற்காகவே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார் ஹேம்ஸ்மித்... நம் இல்லங்களிலும், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், விளையாட்டு பொருட்களில் இந்த வகை பேட்டரிகள் இருப்பதை நாம் பார்த்திருப்போம்... குழந்தைகளை ஈர்க்கும் வகையில் மின்னும் வண்ணத்திலும், மிக சிறிய அளவிலும் இருப்பதால் அதை உணவுப்பொருள் என்றெண்ணி குழந்தைகள் வாயில் வைக்கக் கூடும். ஒரு வேளை அதை விழுங்கி விட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்... 

ஒன்றுமறியாப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு அது உயிரைக் கொல்லும் அளவிற்கு ஆபத்தானது என்றெல்லாம் விபரம் இருக்காது. முடிந்தளவிற்கு பெற்றோர்கள் தான்,  குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் இது போன்ற விஷயங்களை தள்ளி வைக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்