செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரென்ஸ் - நாசா விஞ்ஞானிகள் வரலாற்றுச் சாதனை

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பிய, பெர்சவரென்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரென்ஸ் - நாசா விஞ்ஞானிகள் வரலாற்றுச் சாதனை
x
ஆயிரமாயிரம் ஆச்சரியங்கள் நிறைந்த விண்வெளி மீதான மனிதனின் தேடல் எப்போதுமே மாறாதது. இதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில், செவ்வாய் கிரகம் சென்றடைந்து உள்ளது பெர்சவரென்ஸ். ஏழு மாத காலம், 472 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவு, பயங்கரமான திக் திக் ஏழு நிமிடங்கள்... இறுதியாக செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கம். செவ்வாய் கிரகம் தொடர்பாக, தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நாசா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்சவரென்ஸ் என்ற பெயரில் விண்கலம் ஒன்றை அனுப்பியது. அட்லஸ் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட இந்த விண்கலம், தற்போது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ளது. கடினமான கற்களும் பாறைகளும் பரவிக்கிடக்கும் ஜெசீரோ பள்ளத்தாக்குப் பகுதியில், சுமார் ஒரு டன் எடை கொண்ட பெர்சவரென்ஸ் ரோவரை, தரையிறக்கி, நாசாவின் ஜேபிஎல் பிரிவு விஞ்ஞானிகள் சாதனை படைத்து உள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்ட அதிக எடை கொண்ட விண்கலம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பு, 19 அதிநவீன கேமராக்கள், இரண்டு மைக்ரோபோன்கள், டிரோன் ரக ஹெலிகாப்டர், அதிநவீன சென்சார்கள், 6 அலுமினிய சக்கரங்கள் என்று பிரமிப்பூட்டும் பெர்சவரென்ஸின் பாகங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவ்வாறு, ஒரு அதிநவீன ஆராய்ச்சிக் கூடத்தையே செவ்வாய் கிரகத்தில் நிலை நிறுத்தி இருக்கும் இந்த விண்கலம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்தனவா என்பதை ஆய்வு செய்வதே பெர்சவரென்ஸின் பிரதானப் பணி... விண்கலம் தரையிறங்கி இருக்கும் ஜெசீரா பள்ளத்தாக்கு, பண்டைய காலத்தில் நீரோட்டங்கள் நிறைந்த ஆற்றுப்படுகையாக இருந்திருக்கக்கூடும் என்பதால், ஆய்வுப் பணிகள் அங்கு ஆரம்பமாக உள்ளன. 

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு சாத்தியமா என்பது தொடர்பாகவும் பெர்சவரென்ஸ் ஆய்வு செய்ய உள்ளது. அதிக கட்டளைகள் இன்றி, தாமாக இயங்கும் வகையில், பெர்சவரென்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பொருத்தப்பட்டுள்ள Ingenuity என்ற டிரோன் ரக ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடப்பட உள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி, செவ்வாய் கிரகத்தின் பரப்பில் காணப்படும் கற்கள் உள்ளிட்டவற்றை பெர்சவரென்ஸ் மூலம் சேகரித்து, மீண்டும் அவற்றை மற்றொரு விண்கலம் வாயிலாக பூமிக்கு கொண்டுவரவும் திட்டமிட்டு உள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

பூமியில் வாழ்வதற்கான காலம் அருகிக்கொண்டே வருகிறது; மனிதன் மாற்று கிரகத்துக்கு பயணப்பட வேண்டும் என்று புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ஒருமுறை சொல்லி இருக்கிறார். அவரின் வார்த்தைகளை  உயிர்ப்பிக்கும் விதமாக, பெர்சவரென்ஸ் விண்கலம் மூலம், மாற்று கிரகத் தேடலில், மற்றுமொரு மைல்கல்லை தொட்டுள்ளது, மனித குலம். 

Next Story

மேலும் செய்திகள்