மியான்மரை வளையமிடும் சீனா - வங்காள விரிகுடாவில் கால்பதிக்கும் திட்டம்

உலக அரங்கில் மியான்மரை சீனா பாதுகாக்க காரணம் என்ன?
மியான்மரை வளையமிடும் சீனா - வங்காள விரிகுடாவில் கால்பதிக்கும் திட்டம்
x
இந்தியாவின் வடகிழக்கில் ஆயிரத்து 640 கிலோ மீட்டர் தூரம் எல்லையை பகிர்ந்துகொள்ளும் அண்டை நாடுதான் மியான்மர்.. 1962 முதல் 2011 வரையில் ராணுவ அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்பட்டது.   தேக்கு மரங்கள். பச்சை மாணிக்கங்கள்.. இயற்கை எரிவாயு, நிலக்கரி, பெட்ரோலியம், முப்போகம் நெல் விளையும் பள்ளத்தாக்கு என எண்ணற்ற இயற்கை வளங்களை கொண்ட நாடு. வளங்கள் நிறைந்திருந்தாலும் ராணுவத்தின் செயல்பாடு, சர்வதேச பொருளாதார தடைகளால் நாட்டின் பொருளாதாரம் விவசாயம் மற்றும் அதைசார்ந்த தொழில்களுடன்  குறுகியது. இந்த சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் மியான்மர், சீனாவை நம்பியிருக்க வேண்டியதானது.  பிராந்தியத்தில் தன்னுடைய வலிமையை அதிகரிக்க துடிக்கும் சீனாவும் மியான்மருக்கு ராணுவ தளவாட உதவிகளை வழங்கியதுடன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போன்ற சர்வதேச அமைப்புகளின் நடவடிக்கையில் இருந்தும் மியான்மரை காப்பாற்றியது, காப்பாற்றுகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடை செய்யும் சீனா, மியான்மரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு பாதுகாப்பு கேடயமாக நிற்கிறது. எப்படிதான் சீனா உதவிகளை செய்தாலும் சரி, மியான்மர் பாகிஸ்தானை போன்று வலையில் சிக்கவில்லை. நட்புறவு இருந்தாலும் சரி, தன்னுடைய இறையாண்மையை காக்க பிராந்தியத்திற்குள் சீனாவின் அத்துமீறிய செயலை அனுமதிக்காது. மியான்மரில் செயல்படும் பல ஆயுதக் குழுக்களிடமும் சீனாவின் ஆயுதங்கள் காணப்படுவதற்கு அவ்வப்போது  எதிர்ப்பையும் பதிவு செய்கிறது. இருப்பினும் சீனா சர்வதேச அரங்கில் மியான்மரை விட்டுக்கொடுப்பது கிடையாது. மியான்மரில் தற்போது ராணுவம் ஆட்சியை கைப்பற்றியிருப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கண்டனம் தெரிவிப்பதையும் தடுத்துவிட்டது. இதற்கெல்லாம் பின்னால் மியான்மரின் வளங்கள் சார்ந்த மிகப்பெரிய பொருளாதார திட்டங்கள் உள்ளன. வங்க கடலுடன் நேரடி ஆதிக்கத்தை செலுத்துவதற்கு மியான்மரின் க்யாக்பியூ நகரில் துறைமுகம் ஒன்றை அமைக்கிறது. மேலும், அங்கிருந்து சீனாவின் குன்மிங் நகருக்கு பொருட்களை கொண்டுச் செல்ல பொருளாதார சாலையும் அமைக்கிறது. 

இதுபோக 2 ரயில் வழித்தடங்களுக்கும் பிற உள்கட்டமைப்பு பணிகளுக்கும் முதலீடு செய்துள்ளது. மேலும் மியான்மர் வாங்கிய கடனில் 40 சதவீதம் சீனா வழங்கியிருக்கிறது. 2015-ல் ஜனநாயக நடைமுறையில் சூகி கட்சி ஆட்சியில் இருந்த போதும் சீனா நல்லுறவை தொடர்ந்தது என்றே சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ராணுவம் ஆட்சியை வசமாக்கியிருந்தாலும் தன்னுடைய நோக்கத்தை அடைவதில் குறியாக இருக்கும் சீனா, யார் ஆட்சி செய்தாலும் இசைந்து கொடுத்து செல்வதிலே ஆர்வம் காட்டுகிறது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய போது, உலக நாடுகளுடன் கண்டனம் தெரிவித்த நிலையில் இது உள்நாட்டு விவகாரம் என்றும் இதில் தலையிட்டால் நிலைமை மோசமாகும் என்றும் சீனா கூறிவிட்டது. மியான்மரில் அசாதாரண சூழல் ஏற்பட்டால் முதலீடுகளில் பாதிப்பு ஏற்படும் என்பதில் சீனா உஷாராக இருக்கிறது.
 
இதற்கு மத்தியில் அமெரிக்காவில் ஆட்சியை தொடங்கியிருக்கும் பைடன் நிர்வாகம் செல்வாக்கை அதிகரிக்க, மியான்மர் விவகாரத்தில் அதிரடியான நடவடிக்கையை மேற்கொள்ளுமா? என்பதை பொறுத்தே அடுத்தக்கட்ட நகர்வு இருக்குமென பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்