டிரம்ப்-பைடன் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் - இரு தரப்பினரும் ஒருவரையொருவர் விமர்சனம்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் முடிவுகளை தற்போதைய அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார்.
டிரம்ப்-பைடன் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் - இரு தரப்பினரும் ஒருவரையொருவர் விமர்சனம்
x
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளை தற்போதைய அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு வெளியே டிரம்ப் மற்றும் பைடன் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் ஃபென்சை, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுமாறு பைடன் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். மறுபுறம் டிரம்ப் ஆதரவாளர்கள், தேர்தலில் முறைகேடு செய்து பைடன் வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டினர். 

ஜோ பைடனுக்கு வாழ்த்து - நேசக்கரம் நீட்டுகிறதா சீனா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு ஒரு வாரம் கழித்து சீனா வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. "அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம், பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று சீன வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் வேங் வென்பின் கூறினார். தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த சீனா, இந்த வாழ்த்து மூலம் நேசக்கரம் நீட்டுவதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பாரிஸ் பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம் - மின்னொளியில் ஜொலித்த ஈபிள் டவர்

பிரான்ஸ் நாட்டில் நேற்று பாரிஸ் பயங்கரவாத தாக்குதலின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பாரிஸில் உள்ள பிரசித்தி பெற்ற ஈபிள் டவர் வண்ண விளக்குகளால், கண்களைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
 
எத்தியோப்பியாவில் பதற்றம் அதிகரிப்பு

எத்தியோப்பிய அரசுக்கும், அந்நாட்டின் திஹ்ரே விடுதலை முன்னணிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், திஹ்ரே பகுதியில் வசிக்கும் மக்கள், அண்டை நாடான சூடானில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். பெண்கள் குழந்தைகள் என்று ஆயிரக்கணக்கான எத்தியோப்பிய மக்கள், சூடான் எல்லைப் பகுதியான அல்-பஷ்காவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இதனிடையே, திஹ்ரே பகுதியில் தொடர்ந்து அரசு தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமத் தெரிவித்து உள்ளார்.

அர்மீனியா-அசர்பைஜான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எதிர்த்து அர்மீனிய மக்கள் போராட்டம்

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அர்மீனிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தலைநகர் ஏரவானில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், நாகோர்னா-காரபாக் எல்லைப் பகுதி, அசர்பைஜானுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டினர். மேலும் தங்கள் நாட்டு பிரதமர் நிகோல் பஷின்யனைப் பதவி விலகக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

பெருவில் மக்கள் தொடர் போராட்டம் - அதிபரை பதவி நீக்கியதால் மக்கள் ஆத்திரம்

பெரு நாட்டின் அதிபராக இருந்த மார்டின் விஸ்காரா, ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் லிமாவில் நடந்த போராட்டத்தில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் பத்திரிகையாளர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். 

ஆளில்லா விமானப்படை தொடக்கம் - கடற்பகுதி ட்ரோன் மூலம் கண்காணிப்பு

இலங்கை ராணுவத்தின் ஆளில்லா விமான படைப்பிரிவை அந்நாட்டு ராணுவ தளபதி தொடங்கி வைத்தார். தரை பகுதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை கடற் பரப்பை இந்த படைப் பிரிவு கண்காணிக்கும் என தெரிவித்த ராணுவ தளபதி,  உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஆளில்லா விமானங்கள் உதவும் எனவும் கூறினார். அனைத்து வகையிலும் இலங்கை ராணுவத்தை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ தளபதி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்