சீன பொருட்கள் புறக்கணிப்பால் ஏற்படும் புதிய சிக்கல் - இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என தகவல்

சீன பொருட்கள் புறக்கணிப்பு பிரசாரம் காரணமாக, இந்திய தொழில் நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது. அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு..
சீன பொருட்கள் புறக்கணிப்பால் ஏற்படும் புதிய சிக்கல் - இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என தகவல்
x
இந்திய- சீன எல்லைப் பிரச்சினை காரணமாக சீனப் பொருட்களை புறக்கணிக்கும் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைகளும் சீன பொருட்கள் புறக்கணிப்பு ஆதரவு அளிப்பதாகவே உள்ளன.

மின்துறை, தொலைத் தொடர்பு, நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களை புறக்கணிக்கப்படும் என அந்த துறை அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் பல்வேறு துறைமுகங்களிலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு  சுங்கத்துறை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

சீன நிறுவனங்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட ஆர்டர்களுக்கு பொருட்கள் வந்துள்ள நிலையில், சென்னை துறைமுகம், பெங்களுர் சுங்க அலுவலகங்களில் தேங்கி உள்ளன.

அதன் காரணமாக தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான திருப்பூர் புதிய நெருக்கடியை சந்தித்துள்ளது. 

பின்னலாடைகளுக்கான பட்டன்கள், ஜிப்புகள், மகளிர் உள்ளாடைகளுக்கான எம்ப்ராய்டரி துணிகள் ஆகியவை வந்துள்ள நிலையில், அவற்றை நிறுவனங்களுக்கு அளிக்காமல் சுங்க அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர்.

இந்த பொருட்கள் இல்லாமல் பின்னலாடை தொழில் முடங்கும் என்பதால், ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே  பங்களாதேஷ், வியட்நாம்  போன்ற நாடுகளின் ஏற்றுமதி போட்டி காரணமாக திருப்பூர் வர்த்தகம் குறைந்து வருகிறது.

தற்போது, கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆர்டர்கள் தேக்கமடைந்துள்ளன. 

இந்த நிலையில், அதிகாரபூர்வமற்ற வகையில் சுங்கத்துறையின் செயல்பாடுகளால் திருப்பூர் வணிகம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  30 சதவீத தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீனப் புறக்கணிப்பு என முடிவு எடுத்தால், அதன் சாதக, பாதகங்கள், விளைவுகள் ஆராயந்து முடிவு எடுக்க வேண்டும் என தொழில் அமைப்புகள் தெரிவிக்கின்றன

குறைந்த கால மற்றும்  நீண்ட கால பாதிப்புகள், அதை எதிர் கொள்வதற்கான மாற்று வழிகள், என எதையுமே ஆராயாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என அரசு முடிவு செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கெனவே, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற அதிரடி முடிவுகளால் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் மூடபட்ட நிலையில், சீன புறக்கணிப்பு முடிவால் அபாயம் மேலும் அதிகரிக்க உள்ளதாக தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்