சீனாவில் கொரோனா பாதிப்பு எதிரொலி : உற்பத்தி பாதிப்பால் ஸ்மார்ட்போன், டிவி விலை உயரும் அபாயம்

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் கொரோனா பாதிப்பு எதிரொலி : உற்பத்தி பாதிப்பால் ஸ்மார்ட்போன், டிவி விலை உயரும் அபாயம்
x
கொரோனா வைரஸ் பாதிப்பால், சீன பொருளாதாரம் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், அங்கிருந்து பொருட்கள் வாங்குவதை பல்வேறு நாடுகள் நிறுத்தியுள்ளன.

இந்த நெருக்கடி காரணமாக, இந்தியாவில் கட்டுமானம், வாகன உற்பத்தி, ரசாயனம் மற்றும் மருந்து உற்பத்தி துறைகள் மோசமாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியா- சீனா இடையில் 6 லட்சத்து 88 ஆயிரம் கோடி  ரூபாய் மொத்த வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 

அதில் சுமார் 5 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் இறக்குமதி மதிப்பாக உள்ளது.
 
குறிப்பாக மின்துறை, மருத்துவ துறை உதிரிபாகங்களில் சுமார் 40 சதவீதம் சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. 

இந்தியாவின் இயந்திரங்கள் மற்றும் இயந்திர உதிரிபாக தேவைகளில்  மூன்றில் ஒரு பகுதி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் இறக்குமதி 28 சதவீதம் பாதிக்கப்படலாம் என கணிப்புகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் தொலைக்காட்சி  பேனல், ஸ்மார்ட்போன் உதிரிபாக உற்பத்தி  முடங்கியிருப்பதால், இந்தியாவில் தொலைக்காட்சிகளின்  விலை அடுத்த மாதம் முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என கூறப்படுகிறது.

விலை குறைவு என்பதால் சீனாவிலிருந்து பேனல்களை அதிகளவில் தொலைக்காட்சி  தயாரிப்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்து வருகின்றன. 

அந்த இழப்பை ஈடுகட்ட டிவி விலையை உயர்த்த தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏசி, பிரிட்ஜ் சாதனங்களுக்கான கம்ப்ரசர்களின் வரத்தும் தடைபட்டுள்ளதால் அவற்றின் விலையும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்