முகம் பார்க்காமலே போனில் காதல்... நேரில் வந்த தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கனடா நாட்டை சேர்ந்த தொழிலதிபரிடம் செல்போனில் பெண் குரலில் பேசி பண மோசடி செய்த ஆசாமியை சென்னை போலீசார் கைது செய்தனர்...
x
ஈரோட்டைச் சேர்ந்த பச்சையப்பன், கனடா நாட்டில் செட்டிலாகி அங்கு தொழிலதிபராக உள்ளார். அவருக்கு வித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து 2 குழந்தைகளும் உள்ளனர்.

இதனிடையே கடந்த 2020ல் வித்யாவுக்கும் பச்சையப்பனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அதேநேரம் மறுமணம் செய்து கொள்ளும் நோக்கில் பச்சையப்பன் திருமண இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அப்போது விதவையான பெண்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்றும் அவர் அதில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்துவிட்டு பெரம்பலூரை சேர்ந்த செந்தில் பிரகாஷ் என்பவர் பச்சையப்பனை தொடர்பு கொண்டுள்ளார்.

தன்னுடைய தங்கை ராஜேஸ்வரி விதவையாக இருப்பதாகவும், அவருக்கு தங்களை பிடித்துவிட்டதாகவும் கூறி இருக்கிறார். மேலும் தன் தங்கையின் செல்போன் நம்பர் என கூறி ஒரு நம்பரை பச்சையப்பனிடம் கொடுத்துள்ளார்.

அந்த நம்பரில் பச்சையப்பன் தொடர்பு கொண்டு பேசிய போது பெண் ஒருவர் பேசவே, அதை எல்லாம் நம்பி கனடாவில் இருந்தே காதலை வளர்த்திருக்கிறார் பச்சையப்பன். இவர்களின் காதல் எல்லாமே செல்போன் வாயிலாகவே நடந்திருக்கிறது...

திருமணம் செய்து கொள்ள போகிற பெண் தானே என நினைத்து விலை உயர்ந்த பரிசு பொருட்கள், தங்க நகைகளை எல்லாம் பச்சையப்பன் அனுப்பியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ராஜேஸ்வரியை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் கனடாவில் இருந்து சென்னை வந்த பச்சையப்பன், மயிலாப்பூரில் உள்ள ஓட்டலுக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி வந்துள்ளார். அப்போது தன் வருங்கால மனைவியை இம்ப்ரெஸ் செய்ய சுமார் மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளையும் சர்ப்ரைஸாக வைத்திருக்கிறார்.

ஆனால் போனில் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசிய ராஜேஸ்வரிக்காக பச்சையப்பன் காத்திருந்த போது, திடீரென நேரில் வந்து திகிலை கிளப்பியிருக்கிறார் செந்தில் பிரகாஷ். தன் தங்கைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கொண்டு வந்துள்ள பரிசை கொடு என கேட்கவே சந்தேகமடைந்தார் பச்சையப்பன்.

ஒரு கட்டத்தில் பரிசை கொடுக்க முடியாது என பச்சையப்பன் கூறவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி பரிசை பறித்துச்  செல்லவே அதிர்ந்து போனார் அவர்.

இது ஒருபுறம் இருக்க தன் மனைவியுடன் சமரசமாகி இருக்கிறார் பச்சையப்பன். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் உள்ள விவாகரத்து வழக்கையும் திரும்ப பெற்றனர். அப்போது தான் பணம், நகைகளை இழந்தது குறித்து மனைவியிடம் கூறவே, அவர் அதை எல்லாம் திரும்ப வாங்கி வருமாறு கூறியிருக்கிறார்.

ராஜேஸ்வரிக்கு தான் கொடுத்த ஒரு கோடியே 38 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுத் தருமாறு பச்சையப்பன், ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
அப்போது போலீசார் செந்தில் பிரகாஷை பிடித்து விசாரித்த போது தான் நடந்த அத்தனை தகிடுதத்தங்களும் வெளியே வந்தது.

ராஜேஸ்வரி என்ற பெயர் மோசடிக்காக உருவாக்கப்பட்ட ஒரு கேரக்டர் தான் என்பதும், நிஜத்தில் அப்படி ஒருவர் இல்லை என தெரியவந்தது. பெண் குரலில் கொஞ்சி பேசி பணத்தை கறந்தது எல்லாம் செந்தில் பிரகாஷ் தான் என தெரியவரவே போலீசார் அவரை கைது செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்