ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
x
யானைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரயில் விபத்தில் யானைகள் சிக்குவதை தடுப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

யானைகள் உயிரிழப்பை தடுக்க மலைப்பகுதியில் நவீன தொழில்நுட்பத்தை  பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டத்தை தடுக்க, தேனீக்களின் ரீங்காரம் மற்றும் புலியின் உறுமல் ஒலியுடன் கூடிய அலாரங்கள் வைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாகவும்,

இதில் நல்ல பலன் கிடைத்துள்ளதால், இதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
கோவை மற்றும் பாலக்காடு மண்டலங்களில் உள்ள வனப்பகுதிகளில் தண்டவாளங்களை யானைகள் கடக்க ஏதுவாக 8 கோடி ரூபாய் செலவில் இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்க முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

ரயில்கள் செல்லும் போது, தண்டவாளங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் அதனை தேடி யானைகள் அங்கு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள ரயில்வே துறை, 

இதை தடுப்பது தொடர்பாக பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தெற்கு ரயில்வே நடவடிக்கை குறித்து ஆலோசனை தெரிவிக்க வனத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்