தலையில் பாய்ந்த குண்டு - 5 நாளாக உயிருக்கு போராடிய சிறுவன்

காவல்துறை துப்பாக்கி சூடு பயிற்சி மையத்திலிருந்து வெளியேறிய தோட்டா தலையில் பாய்ந்து மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் புகழேந்தி உயிரிழந்தான். சிறுவன் உயிரிழப்பில் நடந்தது என்ன என்பது குறித்து காணலாம்.
x
புதுக்கோட்டை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் கடந்த 30 ஆம் தேதி காலை திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். 

காலை 8 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய ஒரு குண்டு 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் குடிசை வீட்டின் முன்பு அமர்ந்திருந்த 11 வயது சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்தது. 

இதில் பலத்த காயமடைந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான. அங்கு 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுவன் தலையில் இருந்த தோட்டா அகற்றப்பட்டது.

இதற்கிடையே நார்த்தாமலை பகுதியில் பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

மருத்துவமனையில் சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனின் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 
 
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவின் பெயரில் 31 ஆம் தேதி மாலை இழுப்பூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் தண்டாயுதபாணி தலைமையில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் மத்திய தொழில் பாதுகாப்பு படைப் பிரிவினரும், காவல்துறையினரும் கலந்துக்கொண்டனர்.

 அப்போது புதிய திருப்பமாக சம்பவத்தன்று போலீசாரும் அங்கு பயிற்சியை மேற்கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசாரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  
 
3 ஆம் தேதி காலை தஞ்சை மருத்துவமனையில் சிறுவனின் உடல் நலத்தை விசாரித்த கோட்டாச்சியர், சிறுவனின் பெற்றோரிடம் நடந்த விபரத்தை கேட்டறிந்தார். பசுமலைப்பட்டி பயிற்சி மையத்திலும் விசாரணையை மேற்கொண்டார்.

இந்த நிலையில் மாலை 5.30 மணியளவில் சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலன்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்