11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை என புகார் - மருத்துவமனை மேலாளர் கைது

கரூரில் பள்ளி மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில், மருத்துவருக்கு உதவிய மருத்துவமனை மேலாளர் சரவணனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
x
கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் தலைமறைவான நிலையில் மருத்துவமனை மேலாளர் சரவணன் 15 நாள் நீதிமன்ற காவலில் கைது செய்து சிறையில் அடைப்பு.

கரூரை சேர்ந்த எலும்பு முறிவு மருத்துவர் ரஜினிகாந்த் கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த பெண் காசாளராக பணிபுரிகிறார். அவருக்கு, தீபாவளி போனஸ் குறைவாக கொடுத்ததால் வேலைக்கு
செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மருத்துவமனை மேலாளர் சரவணன் நேற்று முன்தினம் காசாளரின் 17 வயது மகளை மொபைல் போனில் அழைத்து தீபாவளி போனஸ், புத்தாடைகள் தர மருத்துவர்
ரஜினிகாந்த் வரச் சொல்கிறார் என கூறியுள்ளார்.

அதை நம்பிய சிறுமியும் மருத்துவமனைக்கு சென்று, ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளார். அப்போது, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாய், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று
புகார் கொடுத்தார்.

இதையடுத்து மருத்துவர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த ரஜினிகாந்த் தலைமறைவாகி விட்டார். 

மேலாளர் சரவணனிடம் நேற்று முழுவதும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணன் மேற்கண்ட காரணங்களை கூறிய நிலையில், நேற்று இரவு போலீசார் அவரை கைது செய்து கரூர் குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண் 1ன் முன்பு ஆஜர்படுத்தினர். 

வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா மேலாளர் சரவணனை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சரவணன் கரூர் கிளை சிறையில் வைக்கப்பட்டுள்ளார். 

மேலும், தலைமறைவாகியுள்ள மருத்துவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்