வானிலையை கண்டறியும் ஜிபிஎஸ் பலூன்..! ஜிபிஎஸ் பலூன் செயல்படுவது எப்படி..?

சென்னை வானிலை ஆய்வு மையத்திடம் வான் தரவுகளை சேகரிக்கும் ஜி.பி.எஸ். கருவிகள் போதிய அளவில் இல்லையென தகவல் வெளியாகியிருக்கும் நிலை, அவை எப்படி செயல்படுகிறது
x
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படவில்லை என தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இதனை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் மறுத்ததுடன், தமிழகத்தில் உள்ள 4 ரேடார்களும் இயங்கி வருவதாக கூறினார். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தில், வானிலையை உடனடியாக கணிக்கும் வகையில் வானிலை பலூன்களை இயக்க ஜி.பி.எஸ். கருவிக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையத்தால் போதிய வானியல் நகர்வு தரவுகளை திரட்ட முடியவில்லை என்றும் வானிலை ஆய்வு மையத்தால் கடந்த வாரம் பெய்த மழையளவை முன்கூட்டியே கணிக்க முடியாது போனது என்றும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

வானிலை நிகழ்வுகள் ரேடார், செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பலூன் வாயிலாகவும் கணிக்கப்படுகிறது. இம்முறையில் ஹைட்ரஜன் அல்லது ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட பெரிய பலூனில், கனசதுர வடிவிலான ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு வானில் பறக்கவிடப்படும். பலூன் மேலே செல்லும் பாதையை ஜி.பி.எஸ். கருவி, தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அப்போது காற்று அடிக்கும் திசை, அழுத்தம், அதிலிருக்கும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை குறித்த தகவல்களையும் திரட்டி அனுப்பி வைக்கும். 35 கிலோ மீட்டருக்கு அப்பால் செல்லும் போது தானகவே வெடித்துவிடும். இவ்வாறு ஜிபிஎஸ் உபகரணம் அனுப்பும் தகவலை ஆய்வு செய்து, வானிலை ஆராய்ச்சியாளர்கள் வானிலை முன்னறிவிப்புக்கு பயன்படுத்துகிறார்கள். வானிலை கணிப்பில் இம்முறை மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் 34 ஆயிரத்து 400 ஜிபிஎஸ் கருவிகளை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டு இருந்தாலும், அவை கிடைப்பதற்கு குறைந்தது 4 மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்