வயதான தம்பதி மரண வழக்கில் திடீர் திருப்பம் - இருவரையும் கொலை செய்து சிக்கிய கொலையாளி

விழுப்புரம் அருகே வயதான தம்பதி தற்கொலை என கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும், கொலையாளி யார் என்பதும் வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன?
வயதான தம்பதி மரண வழக்கில் திடீர் திருப்பம் - இருவரையும் கொலை செய்து சிக்கிய கொலையாளி
x
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கண்டமங்கலம் பெரியபாபுசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரின் மனைவி பொற்கலை. 70 வயதை கடந்த இவர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்த பிறகு தங்கள் வீட்டில் வசித்து வந்தனர். 

இந்த நிலையில், திங்கட்கிழமை காலை ரங்கநாதனும், பொற்கலையும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் அருகே விஷ பாட்டிலும் கிடந்த நிலையில் தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக விசரணை செய்ததில் அதே கிராமத்தை சேர்ந்த அருள்ராஜ் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது அவர் தான் கொலையாளி என உறுதியானது.

2019ஆம் ஆண்டு நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான பிரச்சினையில் தில்லைநாயகி என்ற பெண்ணை அருள்ராஜ் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கைதான அருள்ராஜ், போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் 2020ல் ஜாமினில் வெளியே வந்துள்ளார். 

இந்த கொலைக்காக மண்வெட்டி, சாக்கு உள்ளிட்ட பொருட்களை ரங்கநாதன் வீட்டில் இருந்து அருள்ராஜ் வாங்கிச் சென்றுள்ளார். இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக இவர்கள் 2 பேரும் உள்ள நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தால் தனக்கு தண்டனை கிடைக்கும் என அவர் பயந்துள்ளார். 

அதனால் சாட்சிகளாக உள்ள இருவரையும் தீர்த்துக்கட்ட அருள்ராஜ் திட்டமிட்டார் கூறப்படுகிறது. அதன்படி கடந்த 18ஆம் தேதி ரங்கநாதன் வீட்டிற்கு சென்று நோட்டமிட்டுள்ளார். பின்னர் நள்ளிரவு அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார் அருள்ராஜ்... 

கதவை திறந்து வைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே பொற்கலையும், வீட்டின் வெளியே ரங்கநாதனும் தூங்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த அருள்ராஜ், முதலில் வீட்டிற்குள் புகுந்து பொற்கலையின் கழுத்தை நெறித்துள்ளதாக விசாரணையில் உறுதியாகியுள்ளது. பின்னர் அவர் அணிந்திருந்த 2 கம்மல், ஒரு மூக்குத்தி, தாலிச் செயின் ஆகியவற்றை எடுத்துள்ளார். அதன்பிறகு இதை தற்கொலையாக சித்தரிக்க திட்டமிட்ட அவர், தான் கொண்டு வந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து பொற்கலையின் வாய் மற்றும் காதின் வழியாக ஊற்றி உள்ளது தெரியவந்துள்ளது.

பின்னர் தலையணையை எடுத்து வந்து வாசலில் தூங்கிக் கொண்டிருந்த ரங்கநாதனின் முகத்தில்  அமுக்கி கொலை செய்து விட்டு அவரின் சடலத்தையும் பொற்கலையின் சடலம் அருகே போட்டு விட்டு அதே பாணியில் விஷத்தை ஊற்றி விட்டு அருள்ராஜ் தப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடந்ததை எல்லாம் அவர் போலீசில் வாக்குமூலமாக கூறிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். சாட்சியாக வந்தால் தனக்கு தண்டனை கிடைக்கும் என நினைத்து வயதான தம்பதியரை கொலை செய்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.... 


Next Story

மேலும் செய்திகள்