டி23 புலியின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்

நீலகிரியில் உலாவிய டி23 புலியை உயிருடன் பிடித்த வனத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
டி23 புலியின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
x
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உலா வந்து கொண்டிருந்த ஆட்கொல்லி புலியை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனிடையே, அந்தப்புலியை சுட்டுப் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதனை எதிர்த்து இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணையின் போது புலியை சுட்டுப் பிடிக்க வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் அது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு தலைமை வன பாதுகாவலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதில், இதுவரை புலியை பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மைசூர் மறுவாழ்வு மையத்தில் புலி பெற்று வரும் சிகிச்சை குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, புலியை பிடித்த வனத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் புலியின் உடல்நிலையை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்