சென்னையில் பிரபல ரவுடி நாகூர் மீரான் கொலை - யார் பெரிய ரவுடி? என்ற போட்டியில் கொலை

நண்டு குழம்புக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட, பிரபல ரவுடி பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு....
சென்னையில் பிரபல ரவுடி நாகூர் மீரான் கொலை - யார் பெரிய ரவுடி? என்ற போட்டியில் கொலை
x
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 32 வயதான நாகூர் மீரான், தென் சென்னையின் பிரபல ரவுடியாக வலம் வந்தவர். இவர் மீது கே.கே.நகர், ஆதம்பாக்கம், குன்றத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, ஆட்கடத்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த நாகூர் மீரானுக்கு இளைஞர் அணி மாவட்ட நிர்வாகி பொறுப்பும் வழங்கப்பட்டது. 

ஆதம்பாக்கத்தில் ரவுடிகளுக்கு இடையே பல்வேறு கோஷ்டிகள் இருப்பதால் இவர் நன்மங்கலம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் வசித்து வந்தார். இந்த சூழலில் கடந்த 14ஆம்  தேதி ஆதம்பாக்கத்தில் ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ரவுடிகளில் யார் பெரியவர்? என்ற மோதலில் நாகூர் மீரான் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்த ராபின், அவரின் கூட்டாளிகளான இருளா கார்த்திக், பிரபா, காணிக்கை ராஜ் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 

வெள்ளக்கல் பகுதியில் வசித்து இருந்த நாகூர் மீரான் ஆதம்பாக்கத்தில் தன் காதலி வீட்டில் இருந்த போது கொல்லப்பட்டார். அப்படி என்றால் காதலி வீட்டுக்கு அவர் வந்தது கொலையாளிகளுக்கு எப்படி தெரிந்தது? என போலீசார் விசாரணை நடத்தினர். 

நாகூர் மீரானை கொலை செய்ய திட்டமிட்ட ராபின் தலைமையிலான கும்பல், அவரின் காதலியான லோகேஸ்வரியை அணுகி உள்ளது. பல நாட்களாக காதலி வீட்டுக்கு நாகூர் மீரான் செல்லாமல் இருந்துள்ளார். ஆனால் அவரை கொலை செய்யும் நோக்கில் லோகேஸ்வரியை வைத்தே நாகூர் மீரானை வரவழைக்க திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக நாகூர் மீரானுக்கு பிடித்த நண்டு குழம்பு வைத்திருக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி தன் வீட்டுக்கு வ​ரவைத்துள்ளார் லோகேஸ்வரி. காதலி வீட்டில் நண்டு குழம்பை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போதே உள்ளே நுழைந்த கும்பல் அவரை கொடூரமாக கொன்றதும் தெரியவந்தது. இதன்பேரில் கொலைக்கு உதவிய லோகேஸ்வரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்