அகழாய்வுப் பணி - தமிழக தொல்லியல் துறை பதில்

அகழாய்வு பணிகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழக தொல்லியல் துறை பதில் அளித்து உள்ளது.
அகழாய்வுப் பணி - தமிழக தொல்லியல் துறை பதில்
x
தமிழக அகழாய்வு பணிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, திமுக செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் தொல்லியல் துறைக்கு மனு அளித்து இருந்தார். இதற்கு தமிழக தொல்லியல் துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, சிவகளை, கொற்கை, கொடுமணல் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணிகளின் முடிவுகள் என்ன என்ற கேள்விக்கு, மேற்கூறிய இடங்களில் அகழாய்வுப்பணிகளும், ஆவணப்படுத்தப்படும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும், முடிவுகளின் அடிப்படையில் அகழாய்வு அறிக்கை வெளியிடப்படும் என்றும் தமிழக தொல்லியல் துறை பதில் அளித்து உள்ளது.

கீழடியில் மேற்கொள்ளப்படும் அகழாய்வு குறித்த  கேள்விக்கு, கீழடியில் ஐந்து மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வு அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக தொல்லியல் துறை தெரிவித்து உள்ளது. கீழடி உட்பிரிவில் மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய 11 தளங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வின் நிலை குறித்த கேள்விக்கு, இத்தகைய இடங்களில், அகழாய்வுப் பணிகள் முடிவு பெற்ற உடன் அறிக்கை வெளியிடப்படும் என்று பதில் தரப்பட்டு உள்ளது. பல்வேறு கால கட்டங்களில் ஆதிச்சநல்லூர், ஆனை மலை, மாளிகை மேடு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வு குறித்த கேள்விக்கு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு அப்போது தமிழக தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்படவில்லை என்றும், பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வு அறிக்கை முடியும் தருவாயில் இருப்பதாகவும், மற்ற இடங்களுக்கான அறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பிடப்பட்ட இடங்களை தவிர்த்து தமிழகத்தில் வேறு இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கு, நெல்லை மாவட்டம், ராஜாக்கள் மங்கலம் மற்றும் தலைச்சங்காடு ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, அகழாய்வுப் பணிகளுக்கான வெள்ளை அறிக்கையை வெளியிடுவது அரசின் முடிவு என்று தமிழக தொல்லியல் துறை பதில் அளித்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்