ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா மீட்பு - கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட யூட்யூப் பிரபலம்

நாகை மீனவன் என்ற பெயரில் யூட்யூபில் பிரபலமான ஒருவர் மிகப்பெரிய அளவில் கஞ்சா கடத்தலில் சிக்கியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
x
நாகை மீனவன் என்ற பெயரில் யூட்யூபில் பிரபலமான ஒருவர் மிகப்பெரிய அளவில் கஞ்சா கடத்தலில் சிக்கியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு கும்பல் படகு மூலம் கடல்வழியே கஞ்சா கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த படகு ஒன்றில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த ஒரு கும்பல், அதிகாரிகளை பார்த்ததும் அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடியது. 

உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள் மூட்டைகளை கைப்பற்றிய போது அதன் உள்ளே கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ந்தனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 280 கிலோ கஞ்சாவை படகு வழியாக இலங்கைக்கு அந்த கும்பல் கடத்த முயன்றது தெரியவந்தது. உடனடியாக அந்த படகை கைப்பற்றி விசாரித்த போது அது நாகை மீனவன் என்ற  பெயரில் யூட்யூபில் பிரபலமாக உள்ள குணசீலன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவரவே மேலும் பரபரப்பு பற்றிக் கொண்டது. 

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் 4, படகு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் களமிறங்கினர். அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

யூட்யூபில் நாகை மீனவன் என்ற பெயரில் பிரபலமான பதிவராக உள்ள குணசீலன் தான் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. மீனவரான குணசீலன், நண்பர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதையும், விதவிதமான மீன்களை சமைப்பதையும் வீடியோவாக பதிவு செய்து யூட்யூபில் பதிவேற்றி உள்ளார். 

கிட்டத்தட்ட 7 லட்சம் பாலோயர்களை கொண்ட இவரது யூட்யூப் சேனல், பலரும் அறிந்ததே. கடலில் மீன்பிடிக்க சென்ற அவருக்கு இலங்கையை சேர்ந்த சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதை வைத்தே இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்திருக்கிறது. 

இதன்பேரில் குணசீலன் மற்றும் அவரது நண்பர்களான மற்றொரு குணசீலன், சதீஷ், சிவசந்திரன் ஆகியோரின் வீடுகளை சுங்கத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்போடு அவர்கள் சோதனை மேற்கொண்டதால் மீனவ கிராமமே பரபரப்பாக காணப்பட்டது. 

இதற்கு முன்பாக அவர்கள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சர்வதேச கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்