லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - பகீர் தகவல்கள்

ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியான வெங்கடாச்சலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச் சூழல் துறையில் பணியின்போது , தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - பகீர் தகவல்கள்
x
சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி வெங்கடாசலம். இவர் 2019 ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு ஆண்டு காலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வகித்து வருகிறார்.2013 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் உள்ளிட்ட பதவிகளில் இருந்த இவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தூத்துக்குடி வ உ சி துறைமுக எஸ்டேட் பகுதியில் கட்டுமானம் கட்டுவதற்கு முறைகேடாக அனுமதி அளித்துள்ளார். கடந்த 2019 ல் உதவியாளர் மற்றும் தட்டச்சர் போன்ற பதவிகளுக்கு தகுதி இல்லாத நபர்களை பணம் பெற்றுக் கொண்டு பணியில் சேர்த்த விவகாரத்திலும் முறைகேட்டில் ஈடுபட்டதையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.கடந்த 2017 ல் திருச்சியில் பணிபுரியும்போது ஜெனரேட்டர், பாய்லர் உள்ளிட்ட முக்கிய பொருட்களை அதிக விலைக்கு வாங்கிய விவகாரத்தில் அரசுக்கு நாற்பத்தி ஏழு லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்திய தையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதில் வெங்கடாசலம் லஞ்சம் பெற்றதும் உறுதியாகி உள்ளது. சில தொழிற்சாலைகளை நிர்பந்தித்து சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெற வேண்டும் எனக்கூறி, அதற்கேற்ப 5 லட்சம் முதல் 15 லட்ச ரூபாய் வரை லஞ்சமாக பணம் வசூல் செய்து அனுமதி அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.இவர் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை அடுத்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வெங்கடாசலத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெங்கடாசலத்தின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த சோதனைகளில் 8 கிலோ தங்கம், 13.50 லட்சம் பணம், 10 கிலோ சந்தன மரத்தாலான பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆட்சி மாற்றத்திற்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் அவசர அவசரமாக 60 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்று வழங்கிய விவகாரத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு கோடிக்கணக்கில் வசூல் வேட்டையில் வெங்கடாச்சலம் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதனிடையே மேலும் 3 கிலோ தங்கம் மதிப்பீடு செய்யப்பட்டது. வெங்கடாசலத்தின் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்