மெரினா முகத்துவாரத்தில் மணல் திருட்டு? ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை மெரினாவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் சட்டவிரோதமாக, மணல் திருடப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மெரினா முகத்துவாரத்தில் மணல் திருட்டு? ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
x
சென்னையில் கூவம் ஆறு கடலில் கலக்கக்கூடிய மெரினா கடற்கரையின் முகத்துவாரத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் லாரிகள் மூலம் சட்ட விரோதமாக  மணல் அள்ளப்படுவதாக சென்னையைச் சேர்ந்த மீனவர் நல சங்கம் சார்பில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தீர்ப்பாய  நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மணல் திருட்டு நடந்த பகுதியில் ஆய்வு செய்ய, சென்னையில் உள்ள மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி, தமிழ் நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர், சென்னை மாநகர காவல் ஆணையாளர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் அதிகாரி ஆகியோர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது. இவர்கள் அந்த பகுதியில் கனரக வாகனங்கள் உள்ளே சென்று மணல் அள்ளப்படுள்ளதா ? அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? கடத்தப்பட்ட மணலை பயன்படுத்தியவர்கள் யார் ? மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன ? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 8ம் தேதிக்கு தீர்ப்பாயம் தள்ளி வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்