ஓட்டலில் தந்தூரி சாப்பிட்ட சிறுமி பலி - உணவில் நச்சுப்பொருள் கலப்பு என தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டவர்களில் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதோடு, சிறுமி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆரணி முழுவதும் ஹோட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.
x
ஓட்டலில் ஒரே உணவு வகையை சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நல பாதிப்பு. அதில் ஒரு சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு.. ஆரணியில் அரங்கேறிய இந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே அம்ஜத் பாட்ஷா என்பவர் 7 ஸ்டார் பிரியாணி என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு கடந்த 8ம் தேதி இரவு துந்தரீகம்பட்டு ஊராட்சியை சேர்ந்த ஆனந்த் என்பவர், மனைவி, குழந்தைகளுடன் சாப்பிட சென்றுள்ளார். பிரியாணியும், தந்தூரி சிக்கனையும் ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில்,  வீட்டுக்கு திரும்பிய சில மணி நேரங்களில் நால்வருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆனந்தின் 10 வயது மகள் லோசினி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற மூவரும், மேல்சிகிச்சைக்காக வேலூருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் மட்டுமல்ல, அதே உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட சுமார் 40 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, ஆரணி கோட்டாச்சியர் கவிதா, டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், உணவில் நச்சுத்தன்மை மிகுந்த பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் நேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்திய கோட்டாச்சியர் கவிதா, நச்சுப்பொருள் பயன்படுத்தியதற்காக ஓட்டலுக்கு சீல் வைத்தார். அஜாக்கிரதையுடன் இருந்ததாக, ஓட்டல் உரிமையாளர் அம்ஜத் பாட்ஷா, சமையல்காரர் முனியாண்டியை 3 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆய்வு முடிவுகளில் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் முருகேஷ் உறுதி அளித்தார். தொடர்ந்து ஆரணி முழுவதும் உணவகங்களில் ரெய்டு நடத்திய அதிகாரிகள், ஷரிப் உசேன் தெருவில் இயங்கி வரும் ஓட்டலில்  காலாவதியான 15 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்