பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகள் வெளியீடு

செப்டம்பர் 11ம் தேதி ஆண்டு தோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகள் வெளியீடு
x
பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 11ஆம் தேதி ஆண்டு தோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். பாரதியார் நினைவுநாளில் மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தப்படும் என்றும், ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் பாரதி இளம்கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், கட்டுரைகள் தொகுத்து புத்தகமாக மாணவர்களுக்கு வழங்கப்படும், அவரின் வாழ்க்கை மற்றும் படைப்பு குறித்து ஆய்வு செய்த அறிஞர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் பரிசுடன் விருது வழங்கப்படும், பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர் குடும்பத்தாருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மூத்த ஆய்வாளர் சீனி.விஸ்வநாதன், பேராசிரியர் ய.மணிகண்டன் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்றும், எட்டயபுரம், சென்னை, மதுரையில் பாரதியியல் என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி அடுத்த ஓராண்டிற்கு வாரந்தோறும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார பூங்காவிற்கு மகாகவி பாரதியார் பெயர் சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்