விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : விநாயகர் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்

உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி வழிபாடு, தீர்த்தவாரி உற்சவம் களைகட்டியது.
x

பிள்ளையார்பட்டி

பழமையான குடவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சதுர்த்தி நாளான இன்றைய தினம் கற்பக விநாயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 
தங்க மூஷிக வாகனத்தில் மலர் அலங்காரத்தில் கற்பக விநாயகர் அருள்பாலித்தார். மேளதாளங்கள் முழங்க மகாதீபாராதனை காட்டப்பட்டது. 

வண்ணாரப்பேட்டை

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் 11 கிலோ எடையிலான மஞ்சள் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். மாணிக்கம் சௌதரி சாலையில் சுமார் 11 கிலோ எடையுள்ள 2 அடி முழுவதும் மஞ்சலில்ளான பிள்ளையாரை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். மேலும், இந்த விநாயகர் சிலைக்கு ஆரத்தி காண்பித்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதில் பாஜக வடசென்னை மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

கரூர்

கரூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குபேர சக்தி விநாயகர் கோவிலில் வெள்ளிக் கவச உடையுடன் காட்சியளித்த விநாயகரை, பக்தர்கள் வழிபட்டனர். கரூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் கரூர் அண்ணாசாலையிலுள்ள கற்பக விநாயகர் கோவிலில் மகா மூர்த்தி ஹோமம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து எல்.ஜி.பி நகர் பகுதியிலுள்ள குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில், வெள்ளிக் கவச உடையுடன் காட்சியளித்த விநாயகருக்கு எருக்கம்பூ மாலை, அருகம்புல் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. 

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விவசாயத்தை காக்க வேண்டும் என பெண் ஒருவர் பொறி வண்டில் விநாயகர் சிலை செய்துள்ளார். கடைவீதி பகுதியில் வசித்து வருபவர் பிரியா ராஜா. கைவினைக் கலைஞரான இவர் களிமண்ணால் ஆன சிறு சிறு பொறி வண்டுகள் மூலம் விநாயகர் சிலை செய்துள்ளார். விவசாயத்தை காப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தவை பொறிவண்டில் விநாயகர் சிலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பனைவிதை வைத்த விநாயகர் சிலை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. தேசமே தெய்வம் என்னும் அறக்கட்டளை சார்பாக பொதுமக்களுக்கு 501 சிலைகள் இலவசமாக வழங்கப்பட்டது. பனைவிதைகளை விதைப்பதை ஊக்குவிக்கும் வகையில் விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டது பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.

கடலூர்

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறிய விநாயகர் சிலைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவு விநாயகர் சிலைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். சிலைகளின் விலை கடந்த ஆண்டை காட்டிலும்  உயர்ந்துள்ள போதும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இதேபோல் பூஜை பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

சிதம்பரம்

சிதம்பரத்தில் வித விதமாக விற்கப்படும் விநாயகர் சிலைகளைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மேல வீதியில் சாலை ஓரத்தில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் விற்கப்பட்டு வருகின்றன. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அவற்றை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும், விநாயகருக்கு படைப்பதற்காக அருகம்புல், எருக்கஞ்செடி பூ, சந்தனம், ரோஜாப்பூ, விளாம்பழம், உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது.







Next Story

மேலும் செய்திகள்