சட்டத்துறையின் புதிய அறிவிப்புகள்

சட்டப்பேரவையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
x
சட்டப்பேரவையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, காரைக்குடியில் புதிய அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும் என்றும், அரசு சட்டக் கல்லூரிகளில் 30 லட்சம் ரூபாயில், அதிவேக இணைய வசதியுடன் கூடிய கம்பியில்லா மின் மண்டலம்  நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு சட்டக்கல்லூரிகளில் சர்வதேச பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் நடத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் ரகுபதி, 14 அரசு சட்டக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று குறிப்பிட்டார். 

சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு, 14 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆசிரிய மேம்பாட்டு திட்டம் மற்றும் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் ரகுபதி, அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ளரங்க விளையாட்டு திடல், உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் எனக்கூறினார். 

சீர்மிகு சட்டப் பள்ளி வளாகத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 240 கிலோ வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செவியுணர் காணொலி ஊடக மையம் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளங்கலை சட்டப் படிப்புகளில் தெரிவு பாடமாக தேசிய மாணவர் படை திட்டம் அறிமுகப் படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில், புதிய பாடப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு அறிமுகப்படும் என்றும், சட்ட ஆராய்ச்சி திறனை சர்வதேச அளவில் மேம்படுத்த 15 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் தொடங்கப்படும் என்றும் கூறிய அமைச்சர் ரகுபதி, திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 20 லட்சம் ரூபாயில் புதிய சட்ட ஆராய்ச்சி மையம் நிறுவப்படும் என்று குறிப்பிட்டார். 



Next Story

மேலும் செய்திகள்