"கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை"

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கோயிலை சீரமைக்க  நடவடிக்கை எடுக்கவில்லை
x
விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, ஆட்சியர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கட்டுமான பணிகளுக்கு தடை விதித்ததுடன், நிலத்தை மதிப்பீடு செய்ய இரு குழுக்களை நியமித்தது. இவ்விரு குழுக்களின் மதிப்பீடும் குறைவாக உள்ளதாக மனுதாரர் குறிப்பிட்ட போது, ஆறு மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதிப்பீட்டாளர்களை கண்டுபிடிக்க இயலவில்லை  என மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்தார். இதையடுத்து, கோவில் நிலத்தை சுதந்திரமாக மதிப்பீடு செய்ய  வெளி மாநிலத்தைச் சேர்ந்த மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோவில் அறங்காவலர்களை நியமிக்க அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். முன்னதாக, சிதிலமடைந்த கோவிலை சீரமைக்கவும், கோவில் பராமரிப்புக்காக தொகுப்பு நிதி உருவாக்கவும்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள்அதிருப்தி தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்