தமிழகத்தில் 6 நகராட்சிகள் தரம் உயர்வு - மாநகராட்சியாவதால் கிடைக்கும் பலன்கள்
தமிழகத்தில் புதிதாக உருவாகும் தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளில் எந்தெந்த பகுதிகள் இடம்பெறலாம், மாநகராட்சியாவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
தமிழகத்தில் புதிதாக உருவாகும் தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளில் எந்தெந்த பகுதிகள் இடம்பெறலாம், மாநகராட்சியாவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
தமிழக சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கையின் போது தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தாம்பரம் மாநகராட்சியில், தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகள், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, சிட்லபாக்கம், மாடம்பாக்கம், திருநீர்மலை பேரூராட்சிகள் மற்றும் தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஊராட்சிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியாகும் கரூரில், வளர்ச்சியடைந்த ஊராட்சிகளான ஆண்டாங்கோவில் கீழ்பாகம், ஆண்டாங்கோவில் மேல்பாகம், ஆத்தூர், காதப்பாறை, மின்னாம்பள்ளி ஆகியவை இணைக்கப்பட வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் காஞ்சிபுரம் பெருநகராட்சி, காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோனேரிக்குப்பம், கருப்பந்தட்டடை, திம்மசமுத்திரம், சிறு காவேரிபாக்கம், கீழம்பி, கீழ்கதிர்பூர், திருப்பருத்திக்குன்றம், புத்தேரி, வையாவூர், ஏனாத்தூர், களியனூர் ஆகிய 11 கிராம ஊராட்சி மன்றங்களும் உத்தேசமாக இணைக்கப்பட உள்ளது.
கும்பகோணம் நகராட்சியை ஒட்டியுள்ள செட்டிமண்டபம் உள்ளூர் ஊராட்சி, அண்ணலக்ரஹாரம் ஊராட்சி, பழவத்தான்கட்டளை ஊராட்சி, அசூர் ஊராட்சி, உமாமகேஸ்வரம் ஊராட்சி, கொரநாட்டு கருப்பூர், பெருமாண்டி ஊராட்சிகள் இணைந்து கும்பகோணம் மாநகராட்சியாகிறது.
இதனுடன் தாராசுரம், சுவாமிமலை, திருநாகேஸ்வரம் ஆகிய 3 பேரூராட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடலூர் நகராட்சியுடன் நெல்லிக்குப்பம் நகராட்சி மற்றும் திருவந்திபுரம், பச்சையாங்குப்பம் குண்டு உப்பலவாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை இணைத்து கடலூர் மாநகராட்சியை உருவாக்க வாய்ப்புள்ளது. மாநகராட்சியாகும் சிவகாசியில், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள், சித்துராஜபுரம், ஆணையூர் , விஸ்வநத்தம், நாரணாபுரம், பள்ளபட்டி, சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம் ,தேவர்குளம், அனுப்பன்குளம் ஆகிய 9 ஊராட்சிகள் உள்ளடங்க வாய்ப்பு உள்ளது.
15-வது நிதிக்குழு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 1.5 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மாநகராட்சிகளாக மாற்றப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி கிடைக்கும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பங்கெடுத்து, மத்திய அரசின் நிதி உதவிகள், மானியங்களை பெற்று உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க செய்ய முடியும்.
சொத்து வரிகளை அதிகரிக்க செய்து, வருவாயை பெருக்க முடியும். புதிய நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் தொழில் வரி விகிதம் மற்றும் வசூல் அளவை கூட்ட முடியும்.
Next Story
