வகுப்பறைக்கு செல்ல முடியாத மாணவர்கள் - ஊருக்கு சென்று கற்பிக்கும் ஆசிரியை

கொரோனா ஊரடங்கால் கல்வி கற்க முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு கிராமத்தை தேடி சென்று பாடம் கற்பித்து அரசு பள்ளி ஆசிரியை கவனத்தை ஈர்க்கிறார். அவரது நற்செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
x
விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது கஞ்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் ஒன்றரை வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் கிட்டத்தட்ட வகுப்பறையையே மறக்கும் நிலைக்கு சென்றுவிட்டனர். இந்த சூழலில் கஞ்சனூர் அரசு பள்ளியில் அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியை ஜெயராணி, தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கிராமங்களுக்கு நேரில் சென்று பாடம் நடத்தி வருகிறார்.

பல மாணவர்களிடம் ஆண்ட்ராய்டு போன் இல்லை என்பதை அறிந்த அவர், மாணவர் நலனுக்காக தினந்தோறும் ஒரு கிராமத்திற்கு சென்று அனைத்து மாணவர்களையும் பொது இடத்தில் வைத்து பாடம் கற்றுக்கொடுக்கிறார். கூடவே சுற்றுச்சூழலை காக்க மரக்கன்றுகளை நடுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றை கொடுத்தும் அசத்துகிறார் ஆசிரியை ஜெயராணி. வகுப்பறைக்கே செல்லாமல் இருந்த சமயத்தில், ஊர் தேடி வந்து ஆசிரியை பாடம் கற்றுக்கொடுப்பது மகிழ்ச்சியை தருவதாக மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர். ஒருகாலத்தில் பள்ளிக்கூட நேரம் எப்போது முடியும் வீட்டிற்கு செல்லலாம் என மாணவர்கள் காத்துக்கொண்டிருக்க, தற்போது எப்போது கொரோனா ஒழியும், பள்ளிக்கூடம் எப்போது திறப்பார்கள் என ஏங்க வைக்கின்றனர் ஜெயராணி போன்ற ஆசிரிய பெருமக்கள்.

Next Story

மேலும் செய்திகள்