தடுப்பூசி தட்டுப்பாடு - மையங்கள் மூடல் : ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள்

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னை, மதுரையில் பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் செயல்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
x
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னை, மதுரையில் பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் செயல்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...
 
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடுவதை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றன மத்திய மாநில அரசுகள்...

இதனால் ஒருபக்கம் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரிக்க, மறுபக்கம் தட்டுப்பாடு நிலவுவதும் தொடர்கதையாகி உள்ளது..

தேவையான தடுப்பூசிகள் வந்து சேராததால், தமிழ்நாட்டில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது..

சென்னையில் பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள 45 கொரோனா தடுப்பூசி மையங்கள், 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் அனைத்து மையங்களும் மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து மூன்றவாது நாளாக தடுப்பூசி மையங்கள் செயல்படவில்லை.

இந்த தகவலை அறியாமல் தடுப்பூசி மையங்களுக்கு செல்லும் மக்கள், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். 

இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான தேதி வந்தும் மையங்கள் மூடியிருப்பதால், தனியார் மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், அங்கு ஒரு டோஸ்க்கு 2000 ரூபாய் வசூலிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்

இதேபோல, மதுரை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் உள்ள நிலையில், தட்டுப்பாடு காரணமாக 37 மையங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அங்கும் ஏராளமான மக்கள் குவிந்ததால், பல இடங்களில் தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.  

தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வரும் சூழலில், தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்