இயந்திரத்தை ஏமாற்றிய மோசடி கும்பல் - கேஷ் டெபாசிட் இயந்திரத்தில் கைவரிசை

எஸ்பிஐ வங்கியின் கேஷ் டெபாசிட் இயந்திரத்தை குறிவைத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட கில்லாடி கும்பலை பிடிக்க தனிப்படை ஹரியானா விரைந்துள்ளது...
x
எஸ்பிஐ வங்கியின் கேஷ் டெபாசிட் இயந்திரத்தை குறிவைத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட கில்லாடி கும்பலை பிடிக்க தனிப்படை ஹரியானா விரைந்துள்ளது...

சைபர் திருட்டுகளில் விதவிதமான டெக்னிக்குகளை கையாளும் கொள்ளை கும்பல் இப்போது தன் ஆட்டத்தை கேஷ் டெபாசிட் இயந்திரத்தில் காட்டியிருக்கிறது...

அதிலும் சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கேஷ் டெபாசிட் இயந்திரங்களில் கைவரிசை காட்டியிருக்கும் இந்த கும்பலால் மீண்டும் சிக்கல் தொடங்கியிருக்கிறது...

வேளச்சேரி விஜயநகர் பகுதியில் உள்ள கேஷ் டெபாசிட் இயந்திரத்தில் 
இருந்து சுமார் 5 லட்ச ரூபாய் பணம் காணாமல் போனதாக போலீசாருக்கு வங்கி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. 

அதேபோல் தரமணி வங்கி இயந்திரத்திலும் சுமார் 4 லட்ச ரூபாய் பணம் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போது மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் சொருகி பணத்தை எடுக்கும் போது இயந்திரத்தின் ஒரு பகுதியை கையால் மறைப்பது தெரியவந்தது. 


அடுத்தடுத்து சென்னையின் ராமாபுரம், கேகே நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் புகார்கள் அணிவகுத்தன. மொத்தமாக 15 லட்ச ரூபாய் பணம் சென்னையில் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்தது. 

இதுதொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கிய போது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கேஷ் டெபாசிட் செய்யும் இயந்திரத்திலும் பணத்தை எடுக்கலாம் என்றிருக்கும் நிலையில் மோசடி கும்பல் நேராக அந்த இயந்திரம் இருக்கும் மையங்களை தேடி சென்றுள்ளது. 

பணத்தை இயந்திரத்தில் இருந்து எடுக்கும் போது சென்சாரை கையால் மறைத்துவிட்டால் பணம் இயந்திரத்தின் உள்ளே செல்வது போன்றாகி விடும். 20 விநாடிகளுக்குள் பணம் அதே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 

இந்த டெக்னாலஜியை தெரிந்து வைத்துக் கொண்ட கும்பல் சென்னையில் கைவரிசை காட்டியிருக்கிறது. அதிலும் மற்ற வங்கிகளின் டெபாசிட் மிஷினில் சென்சார் இருக்குமிடம் தெரியாது என்பதால் எளிதாக கைவைத்து மறைக்க கூடிய எஸ்பிஐ இயந்திரத்தை குறிவைத்திருக்கிறது இந்த கும்பல்...

சீனாவில் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரத்தில் ஜப்பான் சாப்ட்வேர் இருப்பதை தெளிவாக தெரிந்து கொண்டு இந்த பலே திட்டத்தை அரங்கேற்றியது டெல்லியை சேர்ந்த கும்பல் என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. 

இதற்காக பணம் முதலீடு செய்து வெவ்வேறு பெயர்களில் போலியான ஆதாரங்களை வைத்து வங்கி கணக்கை உருவாக்கி அதை வைத்தே லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்ததும் உறுதியாகி இருக்கிறது... 

இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து ஒரு குழுவும், சிசிடிவி ஆதாரங்களை வைத்து மற்றொரு குழுவும் அதிரடியாக விரைந்திருக்கிறது... 

கொள்ளை கும்பல் அரியானாவிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். டெக்னாலஜியை மையமாக வைத்த கொள்ளை என்பதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தின் எதிரொலியால் இந்தியா முழுவதும் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள கேஷ் டெபாசிட் இயந்திரங்களில் பணம் எடுப்பதை தற்காலிகமாக வங்கி தரப்பு நிறுத்தி வைத்துள்ளது. 

இயந்திரத்தையே ஏமாற்றிய அந்த கொள்ளை கும்பல் சிக்கினால் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்