நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்

அடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
x
டிஜிட்டல் யுகத்தில் ஒருவரின் விருப்பு வெறுப்புகளை பகிரும் இடமாக சமூக வலைதளங்கள் உள்ளன. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணைய தளங்கள் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் இதை பயன்படுத்துவதால் யார் என்ன சொல்கிறார்கள்? என்ன கருத்து முன்வைக்கப்படுகிறது? என்ற விவாதங்களும் நடக்கும்..பள்ளி மாணவிகளுக்கு நடந்த பாலியல் கொடூரங்களை வெளியே கொண்டு வந்ததும் இதே வலைதள பக்கங்கள் தான். ஆனால் இப்போது அதுவே பல பிரபலங்களுக்கு தலைவலியை தந்திருக்கிறது. இணையத்தை விட்டு விலகியே இருக்கும் மூத்த திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்களில் போலியான ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டதாக புகார்கள் வந்தன. 
கடந்த 11ஆம் தேதி நடிகர் சார்லி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னுடைய பெயரில் துவங்கப்பட்ட போலியான ட்விட்டர் கணக்கை நீக்க வேண்டும் என அவர் அன்று கோரிக்கை விடுத்தார். இதனிடையே, திங்கட்கிழமை நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனுவை அளித்தார். 
தனது பெயரில் உள்ள போலியான டிவிட்டர் பக்கத்தில்  டாஸ்மாக் குறித்து கருத்து பதிவிட்டிருப்பதால் அது தனக்கு மன உளைச்சலை தந்தது என புகாரில் நடிகர் செந்தில் குறிப்பிட்டிருக்கிறார்.நடிகர் செந்தில் புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே போலி கணக்கை நீக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு காவல் துறை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதேபோல் கடந்த 2ஆம் தேதி சினிமா, சீரியல்களில் துணை நடிகராக நடித்து வரும் மங்களநாத குருக்களும் இதே மாதிரியான புகாரை முன்வைத்திருந்தார். உயிருடன் இருக்கும் தன்னை இறந்து விட்டதாக கூறி அடக்கம் செய்ய இணையத்தில் ஒரு கும்பல் பணம் வசூல் செய்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார், மங்களநாத குருக்கள். 
தன் பெயரை பயன்படுத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணையரிடம் முன்வைத்தார் அவர்...
ஒரு மாதத்தில் 3 நடிகர்கள், அதுவும் இணையத்தை பற்றி அதிகம் அறிந்திராத மூத்த நடிகர்களை குறிவைத்து ஒரு கும்பல் இயங்கிக் கொண்டிருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களில் போலி கணக்கு துவங்கி பணம் பறித்த கும்பல் இப்போது திரைத்துறையினர் பக்கம் திரும்பியிருக்கிறது... விபரீதத்தை தவிர்க்க முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது... 


Next Story

மேலும் செய்திகள்