தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு?

தமிழகத்தில் தற்போது 5 லட்சம் பாட்டில்களுக்கு குறைவான கொரோனா தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பில் உள்ளதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் தற்போது 5 லட்சம் பாட்டில்களுக்கு குறைவான கொரோனா தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பில் உள்ளதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை சுமார் 47 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசி திருவிழாவில் அதிகபட்சமாக கடந்த 16 ஆம் தேதி ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்துக்கு இதுவரை 47 லட்சத்து 3 ஆயிரம் கோவிஷீல்டு,  7 லட்சத்து 82 ஆயிரம் கோவாக்ஸின் என மொத்தம் 54 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

தற்போது 5 லட்சத்திற்கும் குறைவான பாட்டில் தடுப்பூசிகளே இருப்பு இருப்பதால் அடுத்த 3 நாட்களில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் குறைவான தடுப்பூசிகளே  ஒதுக்கபட்டு வருகிறது.

இதன் காரணமாக பல இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.இதனால் முதல் தவணை கோவாக்ஸின் போட்டவர்கள் 28 நாட்கள் நிறைவடைந்தும், 2-ஆம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய அரசிடம் கூடுதலாக 10 லட்சம் கோவிசீல்டு மற்றும் 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை உடனே ஒதுக்குமாறு தமிழக அரசு கேட்டுள்ளது.தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு உடனடியாக தேவையான தடுப்பூசிகளை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்