தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது வாக்கினை பதிவு செய்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்
x
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது வாக்கினை பதிவு செய்தார். புவனகிரி சட்டமன்ற தொகுதியில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் வந்த அழகிரி தன் வாக்கை பதிவு செய்தார். 

திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். காட்பாடியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடிக்கு சென்று, துரைமுருகன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள வாக்குச் சாவடியில், சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான விஜயபாஸ்கர் வாக்களித்தார். தனது மனைவி ரம்யாவுடன் இருசக்கர வாகனத்தில் வந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கை பதிவு செ​ய்தார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள  தனது சொந்த கிராமத்தில் வாக்களித்தார். கண்டனூர் சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற அவர், தனது வாக்கினைப் பதிவு செய்து, ஜனநாயக கடமையாற்றினார்

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி. முனுசாமி போட்டியிடுகிறார்.  தனது சொந்த ஊரான காவேரிப்பட்டணத்தில் தனது வாக்கை குடும்பத்தினருடன் சென்று பதிவு செய்தார். முதல் ஆளாக சென்று கே.பி.முனுசாமி வாக்கை பதிவு செய்தார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமது வாக்கை பதிவு செய்தார்.  சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மா சுப்பிரமணியன், கிண்டி லயன்ஸ் கிளப் வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார். 
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரரான நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தனது வாக்கைப் பதிவு செய்தார். திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளிக்கு தனது மகளுடன் வந்த திருச்சி சிவா அங்கு வாக்குப்பதிவு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்காக, தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மக்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். 

தாராபுரம் அருகே கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி வாக்குச் சாவடியில்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு வாக்களித்தார். வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்ததோடு, முக கவசம், கையுறை அணிந்து கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் வந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்