தமிழகத்திலும் பல கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.
தமிழகத்திலும் பல கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அது பற்றிய தகவல்களை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. இதில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆனால், தமிழகத்திலும், பல கட்டங்களாக பேரவை தேர்தல்கள் நடந்திருக்கின்றன தெரியுமா? அதை அறிந்து கொள்வதற்கு, 50 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தல்களின் வரலாற்றை பார்க்க வேண்டும்.
இந்தியா குடியரசானதும், 1952ம்ஆண்டு நடந்த முதலாவது பேரவை தேர்தல் தான் மிக நீண்ட வாக்குப்பதிவை பார்த்த தேர்தல். அப்போது சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்தில் இன்றைய ஆந்திராவும் கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகளும் இணைந்திருந்தன. இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக இருந்தது, சென்னை மாகாணம்.
இதனால், 1952ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2, 5, 8, 9, 11, 12, 16, 21, 25 ஆகிய தேதிகளில் ஒன்பது கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை நடத்தினார்கள். அந்த தேர்தலில் தான் முதன் முறையாக 21 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டிருந்தது.
அந்த தேர்தலுக்கு பின், மொழி அடிப்படையில் ஆந்திரா போன்ற மாநிலங்கள் உருவானதால், தமிழகத்தின் பரப்பளவு குறைந்தது. இதைத் தொடர்ந்து, 1957 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த இரண்டு பேரவை தேர்தல்களும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டன.
ஆனால், அதற்கு அடுத்த 1967ம் ஆண்டு பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. அந்த ஆண்டில் பிப்ரவரி 5, 18, 21 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழகம் தகித்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்த தேர்தல் முடிவில்தான், ஆட்சியை திமுக கைப்பற்றி, தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் அரசுகளுக்கு முகவுரை எழுதியது.
இதற்கு அடுத்த 1971ம் ஆண்டு பேரவை தேர்தலும் மூன்று கட்டங்களாகத்தான் நடைபெற்றது. 1971ம் ஆண்டு மார்ச் 1, 4, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக நடந்த அந்த தேர்தலிலும் திமுகவே மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைத்தது.
1971ம் ஆண்டு நடைபெற்ற இந்த பேரவை தேர்தல் தான், தமிழகத்தில் கடைசியாக நடைபெற்ற பலகட்ட தேர்தல். அதன்பிறகு கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரே கட்டமாகத்தான் பத்து பேரவை தேர்தல்களை தமிழகம் சந்தித்திருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் நடந்த பேரவை தேர்தலும் கூட, 1991ம் ஆண்டு ஜூன் 24ம் தேதியன்று ஒரே கட்டமாகத்தான் நடத்தப்பட்டது.
தமிழகத்தில், அந்த தேர்தலில் தான் ஓட்டுரிமைக்கான வயது 21ல் இருந்து 18ஆக குறைக்கப்பட்டது. அந்த தேர்தலில் இருந்து 18 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோலவே, வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் முடிவுக்காக நீண்டகாலம் காத்திருப்பதும் தமிழகத்துக்கு புதிதல்ல. பத்து ஆண்டுகளுக்கு முன், 2011ம் ஆண்டில், ஏப்ரல் 13ம் தேதியன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆனால், அந்த தேர்தலில் பதிவான வாக்குகள், சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் பல கட்ட தேர்தல்கள் நடந்த சமயங்களிலும், முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் முடிவுக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தார்கள்.
தமிழக தேர்தல் அரசியலில் இதுபோன்ற இன்னும் பல சுவை கூட்டும் தகவல்களை அடுத்தடுத்த அப்பவே அப்படி தொகுப்புகளில் பார்க்கலாம்..