சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையம்- உயர்நீதிமன்றத்தில் சூரப்பா சார்பில் வழக்கு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
x
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்திற்கு தடை கோரி, துணை வேந்தர் சூரப்பா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவ்வழக்கின் விசாரணை,  நீதிபதி வைத்தியநாதன் முன்பு வந்தபோது, அரியர் தேர்வை ரத்து செய்தற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், பல்கலைகழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சூரப்பா தரப்பில் வாதிடப்பட்டது.மேலும், கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதாலும், அரசுக்கு அடிபணிய மறுத்ததாலும் உள்நோக்கத்துடன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், விசாரணையை சந்திக்க சூரப்பா ஏன் அச்சம் கொள்ள வேண்டும் எனக் கேள்வியை எழுப்பினார்.மேலும், விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஏற்கனவே முன்னாள் துணைவேந்தர்கள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்வி நிறுவனத்தின் நற்பெயரை கருத்தில் கொண்டு சுமூக தீர்வு காண வேண்டும் எனவும் விசாரணை அறிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது எனவும் தமிழக அரசுக்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.மேலும் இந்த மனு குறித்து மார்ச் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்