சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை மெட்ரோ கட்டணத்தை குறைத்து அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 22ஆம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
x
மெட்ரோ ரயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 2 கி.மீ. வரை தற்போது வசூலிக்கப்பட்டு வரும் 10 ரூபாய் என்ற கட்டணத்தில் மாற்றமில்லை என்றும், 2 கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை இனி, 20 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 5 கிலோ மீட்டர் முதல் 12 கிலோ மீட்டர் வரை 30 ரூபாய், 12 கிலோ மீட்டர் முதல் 21 கிலோ மீட்டர் வரை  40 ரூபாய், 21 கிலோ மீட்டர் முதல் 32 கிலோ மீட்டர் வரை 50 ரூபாய் கட்டணம் என நிர்ணயக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கியூ ஆர் கோடு மற்றும் மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் வரையறுக்கப்படாத பயணம் செய்ய 54 கி.மீ வழித்தடத்திற்கு 100 ரூபாய் கட்டணம், ஒரு மாத வரையறுக்கப்படாத பயணம் செய்ய 54 கி.மீ வழித்தடத்திற்கு 2500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில்
கட்டணத்திலிருந்து 50 சதவீத தள்ளுபடி என அவர் அறிவித்துள்ளார். மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு ஆணை வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்