அப்பவே அப்படி... சட்டப் பேரவை தேர்தலில் மெகா கூட்டணி

தமிழக தேர்தல் களத்தில் அமைந்த மெகா கூட்டணிகள் பற்றிய ஒரு தொகுப்பு...
அப்பவே அப்படி... சட்டப் பேரவை தேர்தலில் மெகா கூட்டணி
x
போர்க்களத்துக்கு படைபலம் திரட்டுவது எப்படியோ? அது மாதிரித்தான் தேர்தல் களத்துக்குள் புகும் முன்பாக கட்சிகளை அணி சேர்ப்பதும். 

எந்த அளவுக்கு அதிக கூட்டணி கட்சிகளை சேர்ப்பது என்பதில் தான் எப்போதுமே பிரதான கட்சிகளின் கணக்குகள் இருக்கும். 

1990கள் வரையிலும் இதில் பெரிய அளவிலான முயற்சிகள் இருந்ததில்லை. ஒன்றிரண்டு கட்சிகள் கரம் கோர்த்தாலே போதும் என்ற நிலையே தேர்தல் களத்தில் நீடித்தது.

1980, 1984, 1991, 1996 தேர்தல்களில் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளே பிரதானமாக இருந்தன. அதன் பிறகு பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் என புதிய கட்சிகள் உதயமாகி ஒரளவு செல்வாக்கு பெற்ற நிலையில்தான் மெகா கூட்டணி என்ற பார்முலா அறிமுகமானது. அதை அறிமுகம் செய்தவர் ஜெயலலிதா. 

1996 சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பின், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் முயற்சியை துவக்கி, அதை 1998 நாடாளுமன்ற தேர்தலிலும் பரிசோதித்து பார்த்தார், ஜெயலலிதா. அதிமுகவுடன் பாமக, மதிமுக, பாஜக என கூட்டணியில் சேர்த்து அந்த தேர்தலில் கணிசமான வெற்றியையும் பெற்றார்.

இதையடுத்து, அதே பார்முலாவை அப்படியே 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் ஜெயலலிதா அறிமுகம் செய்தார். அதிமுகவுடன் காங்கிரஸ், தமாகா, பாமக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்  என சேர்த்து ஜம்போ அணியை உருவாக்கினர். எதிர் கூட்டணியாக, அன்றைய ஆளும் திமுக அணியில் பாஜக, விடுதலை சிறுத்தைகள் இருந்தன.

தேர்தல் முடிவில் அதிமுக அமோக வெற்றியை பெற்றது. முந்தைய 1996 தேர்தலில் யாருமே நினைத்து பார்த்திராத அதிர்ச்சி தோல்வியடைந்த அதிமுக, இந்த முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. 

இதே ஜம்போ கூட்டணி பார்முலாவை 2006ம் ஆண்டு தேர்தலில் பரிசோதித்து பார்த்தார் கருணாநிதி. அந்த தேர்தலில் கட்சிகள் அப்படியே அணி மாற, திமுக அணியில் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை இணைத்து ஜம்போ கூட்டணியை கருணாநிதி அமைத்தார்.

கூட்டணிக்குள் அதிக கட்சிகளின் இட நெருக்கடியால், தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட, கடைசி நேரத்தில் திமுக அணியில் இருந்து வெளியேறியது, விடுதலை சிறுத்தைகள் கட்சி..

அதிமுக அணியில் விடுதலை சிறுத்தைகளுடன்  மதிமுகவும் சேர்ந்து களமிறங்கியது. அந்த தேர்தலின்போது, புதிதாக தேமுதிக கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த்தும் தனியாக தேர்தல் களம் புகுந்தார். 

பரபரப்பாக நடந்து முடிந்த 2006ம் ஆண்டு தேர்தலில் ஜம்போ அணி பார்முலாவே மீண்டும் வென்றது.  திமுக கூட்டணியே அதிக இடங்களை பெற்றபோதிலும், திமுகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், 96 இடங்களுடன் ஆட்சியமைத்தார், கருணாநிதி. காங்கிரசும் பாமகவும் வெளியில் இருந்து ஆட்சிக்கு ஆதரவு அளித்தன. தமிழகத்தில் தனிப் பெரும்பான்மை இல்லாமலேயே ஐந்து ஆண்டுகள் நீடித்த அரசு அதுதான். 

எதிரணியில் அதிமுக ஆட்சியை இழந்தபோதும் 61 சீட்டுகளை வென்று பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அமர்ந்தது. 

தேர்தலில் ஜம்போ கூட்டணி பார்முலாவை அறிமுகம் செய்த ஜெயலலிதாவே...,
 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தை போட்டியிடச் செய்து வெற்றி பெற்ற வரலாறையும் எழுதி வைத்திருக்கிறார். தமிழக தேர்தல் வரலாற்றில், 1960களுக்கு பின் அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்சி களமிறங்கியது, 2016 பேரவை தேர்தலில் தான். அந்த முயற்சியை பரிசோதித்து பார்த்து அதில் வெற்றியும் பெற்றார், ஜெயலலிதா.

அதற்கு காரணமாக இருந்தது, மூன்றாவது அணி என தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள், விசிக கட்சிகள் அமைத்த கூட்டணி. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை, மூன்றாவது அணியினர், கணிசமாக பிரித்ததால் அதிமுகவே மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைத்தது. 30 ஆண்டுகளுக்கு பின்ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றது என்ற சாதனையையும் தனதாக்கியது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில், கூட்டணிகளும் கடைசி நேர அணி மாற்றங்களும் ஏற்படுத்திய சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே கிடையாது. அதுபோன்ற சில சுவாரஸ்யங்களை அடுத்தடுத்த நாட்களில் பார்ப்போம்.

Next Story

மேலும் செய்திகள்