கொஞ்சும் அழகி கோமதி - காலில் கொலுசு, நீளமான முடி என அசத்தும் யானை

தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் உற்சாகமாக வளைய வரும் சங்கரன்கோவில் கோமதி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்
கொஞ்சும் அழகி கோமதி - காலில் கொலுசு, நீளமான முடி என அசத்தும் யானை
x
தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் உற்சாகமாக வளைய வரும் சங்கரன்கோவில் கோமதி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

சினிமாவில் யானைகள் சின்ன சின்ன சேட்டைகள் செய்வதை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இதுபோன்ற காட்சிகளை நேரில் பார்க்க கிடைப்பது பேரானந்தம்... 

காலில் மெகா சைஸ் கொலுசு, பார்ப்போரை சுண்டி இழுக்கும் ஹேர்ஸ்டைல், கால்பந்து விளையாட்டு என அத்தனை சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி சங்கரன்கோவில் கோமதி.

யானைகளுக்காக நடத்தப்படும் முகாமில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக கலந்து கொள்ளும் மோஸ்ட் சீனியரும் கூட.

கோவை டாப்சிலிப்பில் கும்கி யானை கலீமுக்கும், செல்வி என்ற யானைக்கும் பிறந்த செல்ல மகளான இந்த கோமதி, சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணசுவாமி கோயிலின் செல்லப்பிள்ளை.

வயது தான் 26.. ஆனால் 5 வயது துறு துறு குழந்தையின் சுட்டித்தனத்துடன் சங்கரன்கோவிலை கலக்கி வரும் இவள், இப்போது தேக்கம்பட்டியில் சுட்டிக் குழந்தையாக சுற்றி வருகிறாள்.

சங்கரநாராயணசுவாமி கோயிலுக்கு கோமதி வந்த கதையும் சற்று சுவாரசியமானது... கும்கி யானை கலீமுக்கு பிறந்த கோமதியை 1996ல் சங்கரநாராயணசுவாமி கோயிலுக்கு பரிசளித்தார் தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார்.

கோமதிக்கு பிடித்த உணவு கரும்பு. அதுவும் ஒரு கட்டு கரும்பை கொடுத்தாலும் அசால்டாக சாப்பிட்டு விட்டு பாகன் சனல்குமாருடன் பாசமாக கொஞ்சி விளையாடுவது கோமதியின் வழக்கம்.

கோமதியை கண்ணும் கருத்துமாக பராமரித்து வரும் பாகன் சனல்குமாருக்கும் கோமதிக்கும் 18 வருட பந்தம். கிட்டத்தட்ட தன் பிள்ளையை போலவே கோமதியை பார்த்து பராமரித்து வருகிறார் சனல்குமார். கோமதிக்கு என்ன பிடிக்கும், என்னவெல்லாம் பிடிக்காது என்பதெல்லாம் அவருக்கு அத்துபடி.

நெற்றியில் வேல் வரைந்து பார்க்கவே பாந்தமாக காட்சி தரும் கோமதி, புத்துணர்வு முகாமில் தோழிகளுடன் அளவளாவும் காட்சிகள் கண்களை நிறைக்கும் பேரழகு.

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானையும், மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியும் கோமதியின் நெருங்கிய தோழிகள்.
தேக்கம்பட்டியில் கால் வைத்த உடனே தோழிகளை பார்த்து  கதைகள் பேசி, கொஞ்சி மகிழ்வதிலும் கோமதி பாசக்காரி.

முகாமில் மற்ற யானைகளை போல மண் குளியல் போடுவது, ஷவரில் குளிப்பது என இருந்தாலும், கால்பந்து விளையாட்டிலும் கெட்டிக்காரி கோமதி. யானை கால்பந்து விளையாடுவதை பார்க்க இங்கு திரண்டு வரும் மக்களும் அதிகம்.

இப்படியாக தோற்றத்தில் யானையாக இருந்தாலும், உள்ளத்தாலும் செயலாலும் குழந்தையாக நம்மை எல்லாம் குதூகலிக்க வைக்கிறாள் இந்த கோமதி.

Next Story

மேலும் செய்திகள்