அப்பவே அப்படி... தேர்தலில் ஒலித்த பிரபலங்களின் வாய்ஸ்

தமிழக தேர்தல் வரலாற்றில் பிரபலங்களின் வாய்ஸ் பற்றிய தகவல்களை தற்போது பார்க்கலாம்.
அப்பவே அப்படி... தேர்தலில் ஒலித்த பிரபலங்களின் வாய்ஸ்
x
தமிழக தேர்தல் வரலாற்றில் பிரபலங்களின் வாய்ஸ் பற்றிய தகவல்களை தற்போது பார்க்கலாம்.

அரசியல் முடிவுக்கு முடிவுரை கட்டி விட்டார், ரஜினிகாந்த். ஆனாலும் கூட, தேர்தலில் அவர் வாய்ஸ் குடுக்க வேண்டும் என ஒரு குரூப் வாய்ஸ் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

தேர்தல் காலங்களில் கூட்டணி எவ்வளவு சகஜமோ? அது போல வாய்ஸ் குடுப்பதும் தமிழகத்துக்கு புதிதல்ல. அதன் ஆரம்பத்தைக் காண்பதற்கு, 1967ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் காலத்துக்கு செல்ல வேண்டும். 

இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு அலை என தமிழகமே தகித்துக் கொண்டிருந்த தேர்தல் அது. மாணவர்கள் எல்லாம் மாற்றத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த தேர்தலும் அதுதான்.

அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது கடும் கோபத்தில் இருந்தார் ராஜாஜி. சுதந்திரா கட்சி என தனிக் கட்சி துவங்கிய அவர், திமுகவோடு கைகோர்த்து காங்கிரசை மிகக் கடுமையாக எதிர்த்தார்.

அந்த தேர்தல் தான், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டி, திராவிட இயக்க ஆட்சியை துவக்கி வைத்த தேர்தல். அண்ணா தலைமையில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்ற....
காமராஜர், அன்றைய முதல்வர் பக்தவத்சலம் என பெரிய தலைவர்களுக்கே தோல்வியை பரிசாக தந்த தேர்தல் அது.

அதற்கு அடுத்த 1971ம் ஆண்டு தேர்தலில் அப்படியே காட்சிகள் எல்லாம் மாறிப் போயின. முதல்வராக இருந்த அண்ணா மறைந்து விட,  எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒன்றாக இணைந்து நின்ற ஒரே தேர்தல் அதுதான்.

ஆனால், எதிரணியில் இருந்தவர்கள் யார் தெரியுமா? இந்திரா காங்கிரசில் இருந்து பிரிந்த காமராஜரின் ஸ்தாபன காங்கிரசும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும். இந்த அணிக்கு வாய்ஸ் கொடுத்தவர், யார் தெரியுமா? அவர் தான் பெரியார். 

அந்த தேர்தலில் காமராஜர், ராஜாஜி, பெரியார் ஒரு புறம் இருக்க... எதிர் புறம் இருந்தவர்கள், கருணாநிதியும் எம்.ஜி.ஆரும். அவர்களுக்கு ஆதரவளித்தார், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.

ஆனால், பெரியார் கொடுத்த வாய்ஸையும் மீறி அந்த தேர்தலில் கருணாநிதி, எம்ஜிஆர் இணைந்து நின்ற திமுக அணி அமோக வெற்றி பெற்றது. 1971ம் ஆண்டு தேர்தலில் திமுக மட்டும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை 184. தமிழக தேர்தல் வரலாற்றிலேயே, ஆட்சியை கைப்பற்றிய ஆளுங்கட்சி ஒன்று இந்த அளவுக்கு தொகுதிகளை இதுவரையிலும் கைப்பற்றியதே இல்லை. அது, கருணாநிதியும் எம்ஜிஆரும் இணைந்து படைத்த சாதனை வெற்றி...

அடுத்ததாக, வாய்ஸ் கலாச்சாரம் எதிரொலித்த தேர்தல், 1996. அந்த தேர்தலில் திமுக தமாகா அணிக்கு வாய்ஸ் கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

ஏற்கனவே, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக அவ்வப்போது வாய்ஸ் எழுப்பி வந்தவர்,  ரஜினிகாந்த். "ஜெயலலிதாவின் ஆட்சி திரும்ப வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் அவர் உதிர்த்த வார்த்தைகள், அன்றைய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவை. 

1995ஆம் ஆண்டு ஜூலை 14ம் தேதி ரஜினி பேசிய இந்த வார்த்தைகளின் சூட்டை, அப்படியே ஆறாமல், 1996  தேர்தல் வரை அப்படியே எடுத்து வந்தனர், எதிர்க்கட்சியினர். இந்த நிலையில் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் இருந்தபடி திமுக தமாகா கூட்டணிக்கு ஆதரவாக வீடியோ வாய்ஸ் கொடுத்தார் ரஜினி. 

சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரண்டுக்குமான அந்த தேர்தலில் ஒட்டு மொத்த தொகுதிகளையும் வாரி சுருட்டியது, திமுக தமாகா அணி.

அதன்பிறகு 2011ம் ஆண்டு தேர்தலிலும் ஒரு வாய்ஸ் ஒலித்தது. அது நடிகர் வடிவேலுவின் வாய்ஸ். அதிமுக தலைமையில் தேமுதிக, இடதுசாரிகள் என கூட்டணி அமைய, அதற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் களமிறங்கினார் வடிவேலு. கட்சியில் சேரவில்லை. ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார் வடிவேலு.

 ஆனால், வடிவேலுவின் வாய்ஸ் எடுபடவில்லை. காமடியாக முடிந்து போனது. ஆளும் கட்சியாக இருந்த திமுக தோல்வியடைந்ததோடு, எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெறவில்லை. அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலிதா. அந்த கூட்டணியில் இருந்த தேமுதிக இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றி பெற்றது...  தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரானார் விஜயகாந்த.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இது போன்ற வாய்ஸ் வறுவல்களும், கூட்டணி பொங்கல்களும் ஏராளமாக உண்டு அவற்றையெல்லாம் அடுத்தடுத்த நாட்களில் சுவைப்போம்

Next Story

மேலும் செய்திகள்