ஆன்லைன் விளையாட்டு; அடிமையான சிறுவன் - ரூ.100 உடன் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்

ஆன்லைன் விளையாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் வீட்டை விட்டு வெளியேறி விபரீதத்தின் விளிம்பிற்கு சென்று விட்டு வந்த சம்பவத்தின் பின்னணியை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
ஆன்லைன் விளையாட்டு; அடிமையான சிறுவன் - ரூ.100 உடன் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்
x
ஆன்லைன் விளையாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் வீட்டை விட்டு வெளியேறி விபரீதத்தின் விளிம்பிற்கு சென்று விட்டு வந்த சம்பவத்தின் பின்னணியை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றிமலையில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் சிறுவனே, ஆன்லைன் விளையாட்டால் இந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளான்.

அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வரும் சிறுவனின் தந்தை, ஆன்லைன் வகுப்புக்காக, செல்போன் வாங்கித் தந்துள்ளார். அதில் ஃப்ரீ பயர் என்ற விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்த சிறுவன், எப்போதும் அதிலேயே மூழ்கி கிடந்துள்ளான்.
அறிமுகம் இல்லாதவர்களுடன் சேர்ந்து கொண்டு விளையாடியதாகவும் கூறப்படுகிறது. 3க்கும்  மேற்பட்ட கணக்குகளை துவங்கிய அந்த சிறுவன் தொடர்ந்து தோல்வியடைந்து வந்துள்ளான். 

இதனிடையே தன்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள குழுவில் இருந்தவர்களிடம் பாயிண்டுகளை கடனாக பெற்று விளையாடி வந்துள்ளார். அதன்படி முகம் தெரியாத நண்பர்களிடம் இருந்து 4500 பாயிண்டுகளை கடன் வாங்கி விளையாண்டுள்ளார் அந்த சிறுவன்,.. 

ஆனால் வெற்றி பெற முடியாமலும், வாங்கிய கடனை திருப்பி தர முடியாமலும் சிறுவன் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. சிறுவனின் நடவடிக்கைகளில் மாற்றத்தை கண்ட பெற்றோர் அவரின் செல்போனை வாங்கி அனைத்து செயலிகளையும் லாக் செய்து மீண்டும் செல்போனை கொடுத்துள்ளனர். 

ஆனால் ஃப்ரீ பயர் விளையாட்டில் பாயிண்டுகளை கடன் கொடுத்த நண்பர்கள் சிறுவனுக்கு போன் செய்து மிரட்டல் விடுக்கவே பயந்து போனார் அவர். என்ன செய்வதென தெரியாத அந்த சிறுவன், தன்னுடைய செல்போனை எடுத்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். வீட்டை விட்டு போகிறேன், என்னை யாரும் தேட வேண்டாம் என கூறி பதிவு செய்ததோடு 100 ரூபாய் பணத்துடன் வெளியேறியிருக்கிறார் அந்த சிறுவன். 

கடந்த 6ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பிய சிறுவனுக்கு எங்கே செல்வதென தெரியவில்லை. பேருந்தில் ஏறி அங்கும் இங்கும் சுற்றிய அவர், கடைசியில் திருச்சிக்கு வந்துள்ளார். கையில் இருந்த பணமும் செலவாகிப் போகவே, ஆட்டோ ஸ்டேண்டில் படுத்து தூங்கி உள்ளார். 

தனக்கு யாரும் இல்லை என கண்ணீருடன் அவர் கூறியதைக் கண்ட ஒருவர், சிறுவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்து அவரை அழைத்துச் சென்று மலைக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனிடையே சிறுவனை காணாமல் தவித்துப்போன பெற்றோர் வீட்டில் இருந்த அவரின் செல்போனை எடுத்து பார்த்த போது தான் நடந்தது தெரியவந்தது. உடனடியாக மகனை மீட்டுத் தர வேண்டும் என அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

சிறுவன் திருச்சி காவல் நிலையத்தில் இருக்கும் தகவல் கரூர் போலீசாருக்கு தெரிவிக்கப்படவே, பெற்றோர் நேரில் சென்று அவரை மீட்டனர். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மனநல சிகிச்சை அளிக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதனிடையே சிறுவனை மிரட்டிய 3 பேரை போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். 

விளையாட்டு வினையாகும் என்பார்கள். அதை நிரூபிக்கும் விதமாக இளைஞர்கள் பலருக்கும் ஆன்லைன் விளையாட்டுகள் வினையாகவே மாறிக் கொண்டிருக்கிறது... 

Next Story

மேலும் செய்திகள்