பெண்களே உஷார்...! பெண்களைக் குறிவைக்கும் மோசடி கும்பல்

பிரபல நிறுவனத்தின் பெயரில் நூதன முறையில் கொள்ளையடிக்க, மர்ம கும்பல் ஒன்று பெண்களைக் குறிவைத்தது அம்பலமாகியுள்ளது. இது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
பெண்களே உஷார்...! பெண்களைக் குறிவைக்கும் மோசடி கும்பல்
x
பிரபல நிறுவனத்தின் பெயரில் நூதன முறையில் கொள்ளையடிக்க, மர்ம கும்பல் ஒன்று பெண்களைக் குறிவைத்தது அம்பலமாகியுள்ளது. இது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

மதுரை ரேஸ்கோர்ஸ் காலனியை சேர்ந்த  மீனா தேவி என்பவர், 9 மாதங்களுக்கு முன்பு, எடை குறைப்பிற்கான பெல்ட் ஒன்றை இணைய  தளம் வாயிலாக ஆர்டர் செய்துள்ளார்.  அவரது பெயருக்கு பெங்களூரில் இருந்து, பிரபல நிறுவனத்தின் முத்திரை அச்சிடப்பட்ட தபால் ஒன்று வீடு தேடி வந்துள்ளது. 

அதில் இருந்த செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்ட போது, குறிப்பிட்ட நிறுவனம் மூலம் கடந்த ஆண்டு பொருட்கள் வாங்கியவர்களுக்கு பரிசு வழங்க இருப்பதாகவும், அதிலுள்ள ஸ்கிராட்ச் கார்ட் மூலம் என்ன பரிசு என்பதை அறிந்து, வாட்ஸாப்பில் அனுப்புமாறு மர்ம நபர் ஒருவர் கூறியுள்ளார். அவர் யாரென்று விசாரித்த போது, தன்னை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நிதீஸ்குமார் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். 

ஸ்கிராட்ச் கார்டில் தனக்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த மீனா தேவி,  அந்தத் தகவலை செல்போனில் பேசிய நபருக்கு அனுப்பியுள்ளார். ஒரு மணி நேரத்தில், அந்த தொகை வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என்றும், அதற்கான 1 சதவீத வரித் தொகையாக 12 ஆயிரத்து 500 ரூபாயை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும் அந்த நபர் மீனாதேவியிடம் கூறியுள்ளார். 

பணத்தை அனுப்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில்  இருந்த மீனாதேவி, தனது உறவினர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.  ஆன்லைன் மோசடிகள் குறித்து மீனா தேவிக்குத் தெரிவிக்க, சுதாரித்துகொண்ட அவர், அந்த மர்ம ஆசாமியைத் தொடர்பு கொண்டு, மேற்கு வங்கத்தை சேர்ந்த நீங்கள் எப்படி தமிழ் பேசுகிறீர்கள்? என்று கிடுக்குப்பிடி பிடித்துள்ளார்.

அதற்கும் அசராத அந்த நபர், தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, நிதீ்ஷ்குமார் சிங் என்கிற பெயரில் ஆதார் அட்டையை அனுப்பி, தன்னை நம்ப வைக்க அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளான்.

இருப்பினும் சந்தேகத்தின் பேரில், அந்த உறவினரே மர்ம நபரின் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது, திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்த்திகேயன் பேசுவதாக எதிர்க்குரல் கூறியுள்ளது. சுதாரித்துக் கொண்ட அவர்கள் விடாமல் அந்த மர்ம நபரைக் கேள்விகளால் துளைத்தெடுக்க, ஒரு கட்டத்தில் சுய ரூபத்தைக் காட்டத் தொடங்கிய அவன், தன்னை எதுவும் செய்ய முடியாது என்று கெத்தாக மிரட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளான். 

அது போலி கும்பல் என்பதை உணர்ந்த மீனா தேவி தரப்பு, பிரபல நிறுவனத்தை தொடர்பு கொண்டு  தங்களது விபரங்கள் எப்படி மோசடியாளர்களுக்கு சென்றது என்று கேள்வி எழுப்பி, அதைப் புகாராகவும் தெரிவித்துள்ளனர். 

பெண்களைக் குறிவைத்து இறங்கியுள்ள இந்த மோசடி கும்பல், நூதன முறையில் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால், இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர், காவல்துறையினர்

Next Story

மேலும் செய்திகள்