போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்

போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
போதைக்காக மருந்து கடைகளை குறிவைத்த கொள்ளையன்
x
போதைக்காக சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரையை குறிவைத்து திருடிய கொள்ளையனை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மருந்துக்கடை ஒன்றை ரமேஷ் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 29ஆம் தேதி இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அடுத்தநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில் பணம் மற்றும் குறிப்பிட்ட ஒரு வகை மருந்து மாயமானது தெரியவந்தது. 

அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் கொள்ளையன் ஒருவனின் உருவம் பதிவாகி இருந்தது. இதேபோல் குமரன் காலனியில் கடந்த 14ஆம் தேதியும், மேற்கு மாம்பலம் பகுதியில் கடந்த 15ஆம் தேதியும் ஒரே பாணியில் கொள்ளை சம்பவ​ங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. 

ஆனால் அதன்பிறகும் கொள்ளை சம்பவங்கள் நின்றபாடில்லை. எல்லா மருந்து கடைகளிலும் கை வரிசை காட்டியது ஒரே நபர் என்பதை சிசிடிவி காட்டிக் கொடுத்தது. அதுவும் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் மற்றும் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் டேபண்டால் என்ற மாத்திரை மட்டுமே திருடப்பட்டு வந்ததை அறிந்த போலீசார் உஷாராகினர். 

பல கட்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த  பிங்கி என்கிற அருண்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரை தான் டேபண்டால்(Tapentadol). இந்த மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதை சிரிஞ்சுகள் மூலம் உடலில் செலுத்திக் கொண்டால் 4 மணி நேரம் வரை போதை இருக்குமாம்...

போதைப் பழக்கத்திற்கு அடிமையான அருண்குமார், இந்த மாத்திரைகளை குறிவைத்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்காக பகலில் மருந்துக்கடைகளை நோட்டமிடும் அவர், நள்ளிரவில் கைவரிசை காட்டி வந்துள்ளார். 

இதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் அவர் சுற்றி வந்து கொள்ளையடித்துள்ளார். ஆதம்பாக்கம், கிண்டி, பள்ளிக்கரணை, கோட்டூர்புரம், வேளச்சேரி என 21 க்கும் மேற்பட்ட இடங்களில் அருண்குமார் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

தனி ஒரு நபராகவே இந்த கொள்ளையில் ஈடுபடுவாராம் அருண்குமார். ஆனால் இவருக்கு டாட்டூ பாபு என்பவர் இருசக்கர வாகனங்களை திருடித் தந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அருண்குமார் அளித்த தகவலின் பேரில் போலீசார் அவரிடம் இருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்