நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் - கை கொடுத்த ஜிபிஎஸ் கருவி

துப்பாக்கி முனையில் நிதி நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை ஹைதராபாத் அருகே தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் - கை கொடுத்த ஜிபிஎஸ் கருவி
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாகலூர் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு காலை நேரம் வாடிக்கையாளர் போல வந்த ஒரு கும்பல், நிதி நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டியது. 

பின்னர் அவர்களை கட்டிப் போட்டு விட்டு நகைகள் வைக்கும் அறைக்குள் சென்ற அந்த கும்பல், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 25 கிலோ தங்க நகைகளை அள்ளி தாங்கள் கொண்டு வந்திருந்த பைகளில் நிரப்பிக் கொண்டு தப்பியது. 

முன்னதாக நிதி நிறுவனத்துக்கு வந்த வாடிக்கையாளர்களையும் கொள்ளை கும்பல் ​துப்பாக்கி முனையில் மிரட்டி அதே பாணியில் கட்டிப் போட்டு விட்டு கொள்ளையில் ஈடுபட்டது. சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையிலான இந்த நிஜ சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.... 

இதனிடையே கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நிதி நிறுவன ஊழியர்களிடம் நடத்திய விசாரணையின் போது தான் கொள்ளையர்களை பிடிக்கும் அந்த தொழில்நுட்பம் குறித்து தெரியவந்தது. இதுவே போலீசாருக்கும் பேருதவியாக இருந்தது. 

குறிப்பிட்ட அந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் நகைகளை எல்லாம் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட ஒரு பெட்டியில் மொத்தமாக வைத்து விடுவார்களாம்... அது அவர்களின் பாதுகாப்புக்காக வைப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. 

ஆனால் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலோ, நகைகளை எல்லாம் பெட்டியுடன் எடுத்துச் சென்றதே அவர்களை சிக்க வைத்திருக்கிறது. நகையை எடுத்துக் கொண்டு கண்டெய்னர் லாரியில் தப்பிய அந்த கும்பல் எங்கெல்லாம் சென்றது என்பதை ஜிபிஎஸ் கருவி காட்டிக் கொடுக்கவே, போலீசாரும் அவர்களை பின்தொடர்ந்துள்ளனர். 

ஹைதராபாத் அருகே சம்சாத்பூர் என்ற இடத்தில் கண்டெய்னர் லாரி செல்வதை அறிந்து கொண்ட தனிப்படை போலீசார், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். 

பின்னர் 3 மாநில போலீசாரும் கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்தனர். அப்போது லாரி ஓட்டுநர் உட்பட 7 பேர் கொண்ட கும்பலை அதிரடியாக கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 25 கிலோ தங்க நகைகள், 7 துப்பாக்கிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 

11 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்ட நிலையில் கைதான 7 பேரையும் கிருஷ்ணகிரி அழைத்து வந்து விசாரணை நடத்தினால் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...

Next Story

மேலும் செய்திகள்