உற்பத்தி முதல் விற்பனை வரை - பொங்கல் கரும்பின் கதை

தித்திக்கும் பொங்கலை போல செங்கரும்பின் சுவையும் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கூடுதல் சுவையாக்கும்.. கரும்பு உற்பத்தி தொடங்கி அதன் விற்பனை வரை என்ன நடக்கிறது?
x
பசுமை நிறம் கொண்ட தோகை காற்றில் அசைந்தாடி வயல்வெளியையே அழகாக்கிக் கொண்டிருப்பது இந்த கரும்புகள் தான்... தமிழர்களின் உணர்வாகவும், உணவாகவும் ஒட்டி விளையாடும் இந்த கரும்பின் கதை அதன் தன்மையை போலவே சற்று அலாதி சுவை கொண்டது... தேனீக்கள் இல்லாமலேயே தேன் போன்ற சுவை கொண்ட இனிப்பை தன்னகத்தே சேகரிக்கும் அதிசய புல் ரகம் இது...

பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சுவை சேர்ப்பதில் கரும்புக்கும் தனியிடம் உண்டு. செங்கரும்பு என்றும் பன்னீர் கரும்பு என்றும் அழைக்கப்படும் இந்த கரும்பு வகையானது இந்த சீசனுக்கென்றே பிரத்யேகமாக பயிரிடப்படுகிறது.. 

9 மாத பயிரான இந்த கரும்பு ரகமானது சித்திரையில் கனுவாக ஊன்றப்படுகிறது... கரும்பு பயிரிடும் விவசாயிகள், கனு விதையை முன் கூட்டியே உற்பத்தி செய்து அதை சித்திரையில் நடவு செய்வது வழக்கம்... 

ஒரு அடி அகலத்துக்கு ஒவ்வொரு கன்றும் நடப்படுகிறது. கரும்பு செழிப்பாக சதைப்பற்றுடன் வளர போதிய தண்ணீர் அவசியம். அதனால் எப்போதும் மண் ஈரப்பதமாக இருக்க வேண்டும் என்பதே கரும்பு சாகுபடியில் கவனிக்க வேண்டிய ஒன்று... 

கரும்பை பொறுத்தவரை அது வளரும் மண்ணின் தன்மையும் முக்கியம். செம்மண் உள்ள பகுதிகளே கரும்பு சாகுபடிக்கு ஏற்றது. 

இதனால் தமிழகத்தில் திருச்சி, சேலம், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட செம்மண் பூமிகளில் கரும்பு பிரதானமாக பயிரிடப்படுகிறது... 

இங்கு விளைவிக்கப்படும் கரும்பு ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. 

விளைவிக்கப்படும் மண், தண்ணீரின் தன்மையை பொறுத்து கரும்பின் சுவையிலும் மாற்றங்கள் இருக்கும். 

வயல்களில் குழி தோண்டி நடவு செய்யப்படும் கரும்புகளை குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பதும் அவசியம். மாதம் ஒருமுறை தோகைகளை உரித்து விட்டால் தான் கரும்பு நன்றாக வளரும்... 

பொதுவாக கரும்புகள் 8 முதல் 9 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. ஆனால் பருவமழையின்போது பலத்த காற்றால் பாதிக்கப்படும் சூழலும் கரும்புக்கே அதிகம் என்பதால் மழைக்காலத்தில் விவசாயிகள் கலக்கத்திலேயே இருப்பர்... 

சித்திரையில் நடவு செய்யப்படும் கரும்புகள் சரியாக 9 மாத இடைவெளியில் மார்கழியில் அறுவடை செய்யப்படுகிறது...

அப்படி அறுவடை செய்யப்படும் கரும்புகள் எல்லாம் சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்காக இடைத்தரகர்களால் எடுத்து வரப்படும்...

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது ஒரு கரும்பு 7 முதல் 10 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.... அப்படி என்றால் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு விவசாயிகளிடம் இருந்து அதிக பட்சம் 200 ரூபாய்க்குள் கொள்முதல் செய்யப்படுகிறது. 

ஆனால் அங்கிருந்து கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படும் கரும்புகளின் விலையை நிர்ணயிப்பது இடைத்தரகர்களும், வியாபாரிகளுமே... 

ஒரு கரும்புக்கு 13 முதல் 16 ரூபாய் வரை நிர்ணயம் செய்யும் இடைத்தரகர்கள் அதனை வியாபாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். இதன்படி ஒரு கட்டுக்கு இடைத்தரகர்களுக்கு 150 ரூபாய் வரை லாபம். 

இடைத்தரகர்களிடம் இருந்து வாங்கப்படும் கரும்புகளுக்கு மேலும் விலை நிர்ணயம் செய்வது விற்பனையாளர்களே... கிட்டத்தட்ட ஒரு கரும்பை 20 ரூபாய்க்கு வாங்கும் அவர்கள், 18  முதல் 35 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கிறார்கள். 

அதிகபட்சம் ஒரு கரும்பு அதன் தன்மையை பொறுத்து 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

இதன்படி பார்த்தால் 20 கட்டுகள் கொண்ட கரும்பானது 350 முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

வாடிக்கையாளராக நாம் ஒரு கரும்பை வாங்கும் போது அதன் அளவை பொறுத்து 50 முதல் 60 ரூபாய் என கிடைக்கும்... 

சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஒரு விலையும், மற்ற மாவட்டங்களில் சற்று குறைந்தும் இது விற்கப்படும்.... 

இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கரும்பு வழங்கப்பட்டது. இதனால் தமிழக அரசே நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ததால் இதுவரை இல்லாத அளவிற்கு மவுசு கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

வருடந்தோறும் கரும்பை அரசே நேரடியாக கொள்முதல் செய்தால் விவசாயிகளின் வாழ்க்கையும் கரும்பை போலவே இனிக்கும் என அவர்கள் கூறுவதும் இங்கே கோரிக்கை தான்... 

Next Story

மேலும் செய்திகள்