"கட் அவுட் போட்டி வேண்டாம் - நலத்திட்ட உதவிகளில் போட்டியிடுவோம்" - உதவிக்கரம் நீட்டும் விஜய் ரசிகர்கள்

எப்போதும் விஜய்க்கு 100 அடி கட் அவுட் வைத்து அவரது படத்தை வரவேற்கும் விஜய் ரசிகர்கள் , இந்த ஆண்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டி மாஸ்டர் பொங்கலை வரவேற்றுள்ளனர்...
கட் அவுட் போட்டி வேண்டாம் - நலத்திட்ட உதவிகளில் போட்டியிடுவோம் - உதவிக்கரம் நீட்டும் விஜய் ரசிகர்கள்
x
விஜய்யின் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போது போட்டி போட்டு கட் அவுட், பாலாபிஷேகம், ஏன் அலகு குத்துவது மொட்டை அடிப்பது போன்ற நிகழ்வுகளையும் அரங்கேற்றி வந்துள்ளனர்.... 

அதில் நெல்லையின் ராம் சினிமாஸ் திரையரங்கத்தில் போட்டி சற்று கடுமையாகவே இருக்கும்.... 

வேதாளம் படத்திற்கு அஜித் ரசிகர்கள் 150 அடி பிளக்ஸ் போர்டு வைத்தனர்... அதை தொடர்ந்து மெர்சல் படத்திற்கு விஜய் ரசிகர்கள் 150 அடியில் கட் அவுட் வைத்தனர்... 

புலி படத்திற்கு 120 அடி அடி கட் அவுட் வைத்து, அது காவல்துறை வாகனம் மீது சரிந்து விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதெல்லாம் கடந்த கால நிகழ்வுகள்... 

ஏன் தற்போது கூட, சர்க்கார் திரைப்படத்திற்கு 175 அடி கட் அவுட் வைத்து, பின் காவல்துறை அறிவுறுத்தலின் படி தான் அகற்றப்பட்டது. 

ஆனால் இந்த ஆண்டோ, அதே காவல்துறை அதிகாரி கைகளாலே, கொரோனாவால் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வைத்து, நெகிழ வைத்துள்ளனர் நெல்லை மாவட்ட விஜய் ரசிகர் மன்றம்.. 

நெல்லை மாநகர காவல்துறை உதவி ஆணையர் சதீஷ்குமார், ரசிகர்களுடன் சேர்ந்து, தியேட்டர் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் பணம், இலவச உடை, ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம், நெய் மற்றும் காய்கறிகள் என பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். 

இதேபோல, திருநங்கைகளுக்கு சுய தொழில் வேலை வாய்ப்புக்காக தையல் மிஷன்களும் வழங்கப்பட்டன. 

போட்டி போட்டுக்கொண்டு அதிக உயரங்களில் கட் அவுட், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் எழுப்பிய மற்ற நடிகர்களின் ரசிகர்களும், அதே போட்டி மனப்பான்மையை நலத்திட்ட உதவிகளிலும் காட்டும் பட்சத்தில், தமிழகத்தில் சினிமா என்பதும் ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்...

Next Story

மேலும் செய்திகள்