சிபிஐ அதிகாரிகள் என கூறி கைவரிசை - துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை

தஞ்சையில் சினிமா பாணியில், சிபிஐ அதிகாரி என கூறி தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிபிஐ அதிகாரிகள் என கூறி கைவரிசை - துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை
x
தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் மலையபெருமாள்....

வீடும், கடையும் அருகருகே உள்ள நிலையில் சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு ஒரு கும்பல் வந்துள்ளது.

தங்களை சிபிஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்ட 3 பேர் கொண்ட அந்த கும்பல், முறையாக வருமான வரி செலுத்தி விட்டீர்களா? என்பது உள்ளிட்ட கேள்விகளை அதிகார தோரணையுடன் எழுப்பியிருக்கிறது. 

மிடுக்கான தோற்றத்தில் அவர்கள் 3 பேரும் இருந்ததை கண்டு நிஜ சிபிஐ அதிகாரிகள் தான் என மலையபெருமாள் நம்பி பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த போது திடீரென அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை கையில் எடுத்தது. 

மலையபெருமாளின் மகள் மற்றும் மகனை மாடிக்கு அழைத்துச் சென்ற அவர்கள் இருவரையும் தனித்தனியே கட்டிப் போட்டுள்ளனர். இதே போல் அவரின் மனைவியையும் கட்டிப் போட்டுவிட்டு மலையபெருமாளிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி 40 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பணம் தர மறுக்கவே, அவரை அந்த கும்பல் கடுமையாக தாக்கியதாகவும் தெரிகிறது. பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை அந்த கும்பல் திருடிச் சென்றது. 

மலையபெருமாளை அந்த கும்பல், வெளியே அழைத்துச் செல்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சுதாரித்துக் கொண்டு அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் கிடைத்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு தப்பி ஓடியது. 

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கொள்ளை கும்பல் யார் ? என்பது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்